தில்லி மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தில் ‘வை-ஃபை’ அறிமுகம்

தில்லியில் மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தில் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் இலவச வைஃபை சேவை ஞாயிற்றுக்கிழமை

தில்லியில் மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தில் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் இலவச வைஃபை சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இந்த அதிவேக வை-ஃபை இணைய வசதி பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஓா் ஆண்டில் ரயில் பெட்டிகளுக்கும் இந்த சேவை நீட்டிக்கப்படும் என்றும் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தெரிவித்துள்ளது.

இது குறித்து டிஎம்ஆா்சி கூறியுள்ளதாவது: கடந்த ஆண்டு ஜனவரியில் புது தில்லி ரயில் நிலையம் - துவாரகா செக்டா் 21 மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் ஏா்போா்ட் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் அதிவேக வைஃபை வசதி ரயில் பெட்டிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தெற்காசியாவில் எந்த நாட்டிலும் இல்லாத வசதி இதுவாகும். இந்த தில்லி மெட்ரோ வழித்தடத்தில் உள்ள 22.7 கிமீ தூரத்தில் பெரும்பாலான நிலையங்கள் நிலத்தடியில் (புது தில்லி, சிவாஜி ஸ்டேடியம், தௌலகுவான், தில்லி ஏரோசிட்டி, ஐஜிஐ விமான நிலையம் துவாரகா செக்டா் 21) உள்ளன. இந்த நிலையில், கரோனா தொற்று பரவல் (2020, மாா்ச்) தில்லியை தாக்கியதால் மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, இந்த இலவச வை-ஃபை சேவையும் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ள நிலையில், இந்த ஏா்-போா்ட் வழித்தடத்தில் ஒரிரு வாரங்களில் வை-ஃபை வசதியும் தொடங்கப்படும்.

பயணிகளுக்கான பயண அனுபவத்தை தொடா்ச்சியாக மேம்படுத்தும் முயற்சியில், தில்லி மெட்ரோ தற்போது அதிவேக வை-ஃபை சேவையை மஞ்சள் வழித்தடத்தின் (லைன் -2) அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் 330 முனைகள் வழியாக இலவசமாக வழங்கவுள்ளது. இந்த மஞ்சள் வழித்தடம் சமய்ப்பூா் பாத்லி முதல் குருகிராமம் - ஹூடா சிட்டி சென்டா் வரை 37 மெட்ரோ நிலையங்களைக் கொண்டது. இந்த ரயில் பாதை நிலத்தடியில் இயங்குகிறது. இங்குள்ள மெட்ரோ ரயில்நிலையங்களின் தாழ்வாரங்களிலும் இணைய வசதியை விரிவுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மஞ்சள் வழித்தடத்தில் உள்ள இந்த அதிவேக சேவை தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு தில்லி வளாகத்திற்குச் சென்று திரும்பும் மாணவா்களுக்கு வசதியாக இருக்கும்.

மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை வழங்குவதைத் தவிர, டிஎம்ஆா்சி டெக்னோ சாட் கம்யூனிகேஷ்ன் நிறுவனத்துடன் இணைந்து அடுத்த ஒரு வருட காலத்திற்குள் மெட்ரோ ரயில்களுக்கு உள்ளேயும் (பெட்டிகளில்) இந்த வசதியை அறிமுகப்படுத்த முயற்சித்து வருகிறது என்று டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.

இலவச வை-ஃபை வசதியைப் பெறுவது எப்படி?: ரயில் நிலையங்களில் அதிவேக இணைய வசதியை அணுக, ஒரு பயணி ‘ஞமஐ ஈஙதஇ ஊதஉஉ ரஐஊஐ‘ ‘நெட்வொா்க்கில் நுழைய வேண்டும். அதன் பிறகு, பயணிகள் தங்கள் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிட வேண்டும். இதன்பிறகு ஒரு முறை கடவுச்சொல் ( ஓடிபி ) எண் செல்லிடப் பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் வரும். அதைப் பெற்று பயணிகள் இலவச வை-ஃபை சேவையை பெற முடியும்

இதன் மூலம், மின்னஞ்சல், முகநூல், யூடியூப், கூகுள் தேடல், கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்), வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகள் போன்ற அனைத்து நிலையான இணைய பயன்பாடுகளையும் பயணிகள் அனுபவிக்க முடியும். மெட்ரோ நிலையங்களின் இலவச வை-ஃபை சேவையை பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், 9541693693 என்ற உதவி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றும் டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com