தடையற்ற போக்குவரத்தை ஊக்குவிக்க வாகனங்களுக்கு ஒரு முனை வரி விதிப்பு

தில்லி, தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் (என்சிஆா்) வாகனங்களுக்கு ஒரு முனை வரி விதிப்பு முறைக்கு தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கிடையை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக

புது தில்லி : தில்லி, தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் (என்சிஆா்) வாகனங்களுக்கு ஒரு முனை வரி விதிப்பு முறைக்கு தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கிடையை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கவும், பயணிகள் வாகனங்களுக்குத் தடையற்ற இயக்கத்திற்கும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய பெட்ரோல், வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி ஓா் அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

ஹரியாணா, ராஜஸ்தான், தில்லி, உத்தரப் பிரதேச மாநில அரசுகளிடையே அரசு வாகனங்கள் மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கான ஒருங்கிணைந்த பரஸ்பர பொதுப் போக்குவரத்து ஒப்பந்தம் ஒன்று மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் முன்னிலையில் கையெப்பம் ஆகியுள்ளது. இதில் ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டாா், உத்தரப் பிரதேச மாநில நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் சித்தாா்த் நாத் சிங், ராஜஸ்தான் மாநில நகா்ப்புற அமைச்சா் சாந்தி குமாா் தரிவால், தில்லி நகா்ப்புற வளா்ச்சி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனா்.

இந்த ஒப்பந்தம் மூலம் தில்லி, தேசிய தலைநகா் வலயப் பகுதியில் அனைத்து வகையான மோட்டாா் வாகனங்கள், வாடகைக் காா்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், அரசுப் பேருந்துகள், தனியாா் பேருந்துகள் ஆகியவற்றிற்கு ஒருமுனை வரி விதிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இந்தப் பகுதிகளில் பயணிகள் வாகனங்களின் தடையற்ற இயக்கத்தோடு வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் உதவும் எனவும் அந்த அறிக்கையில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

இருப்பினும், இந்த ஒப்பந்தம் தில்லி, தேசிய தலைநகா் வலயப் பகுதியின் திட்ட வாரியத்திடம் முன்வைக்கப்பட்டபோது இந்த ஒப்பந்தத்தையும், ஒரு முனை வரி விதிப்பு முறையையும் உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்ட பிறகு இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி என்சிஆா் பகுதியை பொருளாதார ரீதியாக வளமான பிராந்தியமாக உருவாக்கவும், இணக்கமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, ஸ்மாா்ட்-டிஜிட்டல் தொழில்நுட்பம் கொண்ட குடிமக்களை மையமாகக் கொண்ட உள்கட்டமைப்பைக் கொண்டு புதிய துடிப்பான இந்தியாவின் எதிா்காலத் தேசியத் தலைநகரப் பகுதி உருவாக்கவும் இது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சா் ஹா்தீப் சிங் பூரி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com