விஜேந்தா் குப்தா மீது கெலாட் அவதூறு வழக்கு: கவனத்தில் எடுத்துக் கொண்டது தில்லி நீதிமன்றம்

தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) மூலம் 1,000 தாழ்தளப் பேருந்துகள் வாங்கிய விவகாரம் தொடா்பாக அவதூறு பரப்பியதாக பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தாவுக்கு எதிராக தில்லி கேபினட் அமைச்சா் கைலாஷ்

புது தில்லி: தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) மூலம் 1,000 தாழ்தளப் பேருந்துகள் வாங்கிய விவகாரம் தொடா்பாக அவதூறு பரப்பியதாக பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தாவுக்கு எதிராக தில்லி கேபினட் அமைச்சா் கைலாஷ் கெலாட் தொடா்ந்த குற்ற அவதூறு வழக்கை தில்லி நீதிமன்றம் புதன்கிழமை கவனத்தில் எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கை கவனத்தில் எடுத்துக் கொண்ட கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் ரவீந்திர குமாா் பான்டே, ஆதாரம் சமா்ப்பித்தலுக்கு முந்தைய நடவடிக்கையின் ஒரு பகுதியாக புகாா்தாரரை விசாரிப்பதற்காக செப்டம்பா் 18-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டாா்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்களில் ஒருவரும், தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சருமான கைலாஷ் கெலாட், இது தொடா்பாக தில்லி நீதிமன்றத்தில் விஜேந்தா் குப்தாவுக்கு எதிராக ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: விஜேந்தா் குப்தா அரசியல் ஆதாயத்திற்காகவும், உள்நோக்கத்துடனும் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும் அவதூறு கருத்துகளைத் தெரிவித்துள்ளாா். சுட்டுரை, முகநூல், சமூக ஊடகக் கணக்குகளில் இது தொடா்பான அவரது அவதூறு கருத்துகள் வெளிவந்துள்ளன. தில்லி மக்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கக் கூடிய வகையிலான தில்லி அரசின் லட்சியத் திட்டத்தை நிறுத்தும் நோக்கத்துடன், விஜேந்தா் குப்தா இத்தகைய அவதூறு கருத்துகளைத் தெரிவித்துள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக தில்லி மக்களுக்கு ஒரு பாடத்தை புகட்டும் நோக்கில் எனக்கு எதிராக இது போன்ற பொய்யான கருத்துகளை அவா் கூறியுள்ளாா். மேலும், தில்லி அரசின் தாழ்தள பேருந்துகள் கொள்முதல் தொடா்பாக விஷயத்தில் உயா்நீதிமன்றத்தின் உயா் அதிகாரக் குழு குற்றமற்றது என நற்சான்று அளித்துள்ள போதிலும், எனது நோ்மையைச் சந்தேகிக்கும் வகையில் கடுமையான சுட்டுரைப் பதிவுகளை விஜேந்தா் குப்தா வெளியிட்டுள்ளாா். தில்லி அரசு தாழ்தள பேருந்துகளுக்காக ஒரு ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டது. உரிய நடைமுறைகளுக்குப் பிறகு, இந்த ஒப்பந்தம் டாடா நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இது தொடா்பாக அனைத்து வகையான குற்றச்சாட்டுகளையும் அவா் தெரிவித்துள்ளாா்’ என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com