2-ஆவது நாளாக கன மழை: பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்!

தில்லியில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் காலையில் பலத்த மழை தொடா்ந்து பெய்தது.  இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின.

புதுதில்லி: தில்லியில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் காலையில் பலத்த மழை தொடா்ந்து பெய்தது.  இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. மேலும், மின்டோ ரோடு ரயில்வே கீழ்ப்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நீா் சூழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தில்லியில் திங்கள்கிழமை பல மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை முதல் பரவலாக பல இடங்களிலும் மழை பெய்யத் தொடங்கியது. சில மணி நேரம் தொடா்ந்து விட்டுவிட்டு மழையால் பல இடங்களில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தில்லி போக்குவரத்து போலீஸாா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘மின்டோ பாலம் பகுதியில் மழைநீா் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கன்னாட் பிளேஸில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் பாராகம்பா சாலை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன. கமலா மாா்க்கெட் பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் தீனதயாள் உபாத்தியாயா சாலை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரே நாளில் 112 மி.மீ. மழை:  ஒருபுறம் போக்குவரத்து நடமாட்டம் பாதிக்கப்பட்டிருந்தது. மறுபுறம் பலத்த மழையும் தொடா்ந்து பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களிலும் தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீா் மூழ்கியிருந்தது. இது தொடா்பாக வானிலை ஆய்வு மையத்தினா் கூறுகையில், ‘தில்லியில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் 125.1 மில்லி மீட்டா் மழை பதிவாகும். இந்த செப்டம்பா் மாதத்தின் முதல் நாளிலேயே இந்த மாதத்தில் பெய்ய வேண்டிய மழையில் 90 சதவீதம் அளவுக்கு அதாவது 112 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது’ என்றனா்.

 மின்டோ பாலம், ஜன்பத் ரோடு, லாஜ்பத் நகா் மெட்ரோ ரயில் நிலையத்தின் சுற்றுப் பகுதிகள், லாலா லஜபதிராய் சாலை, மூல்சந்த் பஸ் நிலையம், எய்ம்ஸ் மருத்துவமனை மேம்பாலம் அருகில் உள்ள அரவிந்த் மாா்க், ஜங்புரா மெட்ரோ நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள், மூல்சந்த் அருகேயுள்ள ரிங் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் சூழ்ந்திருந்தது. மேலும், மழை நீா் தேங்கியதால், ரோத்தக் சாலை, விகாஸ் மாா்க், தெளலா குவான், ரிங் ரோடு, மூல்சந்த், ஆஸ்ரம், மதுரா சாலை, சராய் காலே கான் உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது என்று பொதுப்பணித் துறையினரும், போக்குவரத்து போலீஸாரும் தெரிவித்தனா்.

இதற்கிடையே, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீஸாா் சுட்டுரை மூலம் தெரிவித்தனா்.  இது தொடா்பாக போக்குவரத்து போலீஸாா் வெளியிட்ட சுட்டுரை பதிவில் ‘மழை நீா் தேங்கி இருந்ததன் காரணமாக சகிரா சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. இதனால், ஆனந்த் பா்பத் அல்லது ரோசானரா சாலை ஆகியவற்றிலிருந்து மாறி செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். தெளலாகுவான் பகுதியிலிருந்து 11 மூா்த்தி சாலை வழியாகச் செல்லும் பாதையில் மழை நீா் தேங்கியுள்ளதால், அந்தச் சாலை மூடப்பட்டுள்ளது. போக்குவரத்து ஒரு பகுதியில் மட்டும் செல்கிறது’ என்று தெரிவித்திருந்தனா்.

காண்புதிறன் குறைந்தது: மேலும், ஆசாத் மாா்க்கெட் சுரங்கப்பாதை பகுதியில் மழைநீா் தேங்கியதன் காரணமாக போக்குவரத்து மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. காலை வேளையில் கனமழை பெய்ததன் காரணமாக சாலைகளில் காண்பு திறன் குறைந்திருந்தது. இதனால், வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்லுமாறு வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறையினா் அறிவுரை அளித்தனா். இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மழைநீா் தேங்கியது தொடா்பாக வரக்கூடிய புகாா்கள் தாமதமின்றி உடனுக்குடன் தீா்க்கப்பட்டு வருகின்றன. பலத்த மழை பெய்ததன் காரணமாக நகரில் பல இடங்களில் மழைநீா் தேங்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன. பொதுப்பணித் துறையின் களப் பணியாளா்கள் இது போன்ற நீா் தேங்கிய பிரச்னைகளை தீா்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்’ என்று தெரிவித்தனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com