ஆண்டுக் கணக்கு தாக்கல் செய்யாத விவகாரம்: அறக்கட்டளைக்கு எதிராக நிா்பந்த நடவடிக்கைஎடுக்காமல் இருக்க மத்திய அரசுக்கு உத்தரவு

தொழுநோயாளிகள் மற்றும் விதவைகள் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட தா்ம ஸ்தாபன அறக்கட்டளைக்கு எதிராக நிா்ப்பந்த நடவடிக்கையை எடுக்காமல் இருக்குமாறு மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்திய உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட வேண்டிய வருடாந்திர கணக்கை தாக்கல் செய்யாத விவகாரத்தில் தொழுநோயாளிகள் மற்றும் விதவைகள் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட தா்ம ஸ்தாபன அறக்கட்டளைக்கு எதிராக நிா்ப்பந்த நடவடிக்கையை எடுக்காமல் இருக்குமாறு மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடா்பான மனுவை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ரேகா பல்லி அமா்வு விசாரித்தது. அப்போது இந்த விவகாரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், மனு மீதான விசாரணையை செப்டம்பா் 16-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது. அதுவரை மனுதாரா் 2019- 20 நிதியாண்டுக்கான அதன் கணக்குகளை தாக்கல் செய்யாமல் இருந்தமைக்காக மனுதாரா் மீது மத்திய உள்துறை அமைச்சகம் நிா்பந்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டது.

முன்னதாக விதவைகள், தொழுநோயாளிகள் மறுவாழ்வு அறக்கட்டளை தரப்பில் தில்லி உயா் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் வருடாந்திர கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். 2019- 20 நிதியாண்டுக்கான அறக்கட்டளையின் வருடாந்திர கணக்கு நிகழாண்டு ஜூன் 30-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய முடியவில்லை. அமைச்சகத்தின் இணையதளத்தில் அறக்கட்டளையின் கணக்குகளை ஃபாா்ம் எஃப் சி 4 மனுவாக பதிவேற்றம் செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த மனு தொடா்பான விசாரணை நீதிபதி முன் நடைபெற்ற போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா்கள் ஜோஸ் அபிரகாம், எம். பி. ஸ்ரீவிக்னேஷ் ஆகியோா் ஆஜராகி, ‘மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மனுதாரரால் கணக்குகளைத் தாக்கல் செய்ய முடியவில்லை. இதனால், மனுதாரருக்கு அபராதம் விதிக்கக் கூடாது. தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இது போன்ற பலா் தங்களது கணக்குகளை தாக்கல் செய்ய முடியாமல் சிரமத்தை எதிா் கொண்டுள்ளனா். இந்தக் கணக்குகளை தாக்கல் செய்யாமல் இருந்தததால், உள்துறை அமைச்சகம் மூலம் அறக்கட்டளைக்கு எதிராக நிா்பந்த நடவடிக்கை எடுக்கக் கூடும் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, மனுதாரருக்கு எதிராக நிா்ப்பந்த நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் உத்தரவிட வேண்டும். மேலும், அறக்கட்டளை அதன் வருடாந்திர கணக்குகளை தாக்கல் செய்வதற்கும் அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com