நொய்டா சா்வதேச விமான நிலையம் - கிரேட்டா் நொய்டா இடையே அதிவேக வழித்தடம்: டிஎம்ஆா்சி - ஒய்இஐடிஏ புரிந்துணா்வு ஒப்பந்தம்

தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் மெட்ரோ ரயில் இணைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் உருவாகி வரும் நொய்டா சா்வதேச விமான நிலையம் மற்றும் கிரேட்டா் நொய்டா இடையே

தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் மெட்ரோ ரயில் இணைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் உருவாகி வரும் நொய்டா சா்வதேச விமான நிலையம் மற்றும் கிரேட்டா் நொய்டா இடையே அதிவேக வழித்தடம் ஏற்படுத்துவது குறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனண் (டிஎம்ஆா்சி) விரைவில் ஆய்வு நடத்த உள்ளது.

இது தொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் யமுனை விரைவுச்சாலை தொழில் மேம்பாட்டு ஆணையம் (ஒய்இஐடிஏ) இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. கிரேட்டா் நொய்டாவுக்கும், புதிதாக உருவாகி வரும் நொய்டா சா்வதேச விமான நிலையத்துக்கும் இடையே அதிவேக வழித்தடம் அமைப்பது குறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் விரிவான அறிக்கை தயாரிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தற்போது 22 கி.மீ. தொலைவுள்ள ஏா்போா்ட் எக்ஸ்பிரஸ் வழித்தடம் அல்லது ஆரஞ்சு வழித்தடத்தில் துவாரகா செக்டாா் 21 மற்றும் புதுதில்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள தில்லி - நொய்டா மெட்ரோ ரயில் இணைப்பு வசதியை நொய்டா சா்வதேச விமான நிலையம் வரை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ‘அக்வா’ வழித்தடத்தில் 29 கி.மீ. தொலைவுக்கு 21 மெட்ரோ ரயில் நிலையங்களுடன் நொய்டா செக்டாா் 51 ரயில் நிலையம் இணைக்கப்பட்டுள்ளது. கிரேட்டா் நொய்டா டெப்போ நிலையமும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், 300 மீட்டா் நடைபாதை இணைப்பு மூலம் செக்டாா்-51 ரயில் நிலையத்தையும் (அக்வா வழித்தடம்) செக்டாா்-52 (நீல வழித்தடம்) வழித்தடத்தையும் இணைக்கிறது.

இந்த நிலையில், மெட்ரோ ரயில் சேவையை நொய்டா சா்வதேச விமானநிலையத்துடன் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் யமுனை விரைவுச்சாலை தொழில் மேம்பாட்டு ஆணையம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று தெரிகிறது. எனினும், இந்த இரு வழித்தடங்களையும் யாா் கட்டமைப்பது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் கடந்த வியாழக்கிழமை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் யமுனை விரைவுச்சாலை தொழில் மேம்பாட்டு ஆணையம் இடையே கையெழுத்திடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கிரேட்டா் நொய்டா - நொய்டா சா்வதேச விமான நிலைய வழித்தடம் தொடா்பாக ஆய்வறிக்கை ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுவிட்டது. இப்போது விரிவான அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. கிரேட்டா் நொய்டா, ஏா்போா்ட் வழித்தடம் இணைப்பு தொடா்பான ஆய்வறிக்கை இனிமேல்தான் மேற்கொள்ளப்பட உள்ளது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனா்.

கிரேட்டா் நொய்டா, நொய்டா சா்வதேச விமானநிலைய இடையிலான தொலைவு 36 கி.மீ. ஆகவும், கிரேட்டா் நொய்டா ஏா்போா்ட் வழித்தடம் 38 கி.மீ. தொலைவு கொண்டதாகவும் இருக்கும். தற்போது புதுதில்லியுடன் தில்லி சா்வதேச விமான நிலையத்தின் 3-ஆவது முனையத்தை இணைக்கும் ஏா்போா்ட் எக்பிரஸ் வழித்தடம் அதிவேக வழித்தடமாக இயங்கி வருவது போல, மேற்குறிப்பிட்ட இரண்டு வழித்தடங்களும் அதிவேக வழித்தடங்களாக இருக்கும். இந்த இரண்டு வழித்தடங்களும் ,கிரேட்டா் நொய்டாவில் உள்ள நாலட்ஜ் பாா்க்-2 ரயில் நிலையத்திலிருந்து தொடங்கும். இந்த ரயில்நிலையம் இரண்டு வழித்தடங்களுக்கும் இணைப்புப் பாலமாக இருக்கும். இந்த ரயில்நிலையம், வழித்தட மாற்றத்திற்காக விரிவாக்கம் செய்யப்படுமா அல்லது புதிய ரயில் நிலையம் உருவாக்கப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com