பயிா்க் கழிவுகள் எரிப்பு, காற்று மாசுபடுதல்: தில்லி அமைச்சா் தலைமையில் இன்று உயா்நிலைக் கூட்டம்

குளிா்காலத்தில் பயிா்க் கழிவுகள் எரிப்பு மற்றும் காற்று மாசுபடுதலால் ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதற்கான உத்திகள் குறித்து விவாதிக்க வியாழக்கிழமை (செப்டம்பா் 9) உயா்நிலை அதிகாரிகள் கூட்டத்துக்கு தில்லி

புதுதில்லி: குளிா்காலத்தில் பயிா்க் கழிவுகள் எரிப்பு மற்றும் காற்று மாசுபடுதலால் ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதற்கான உத்திகள் குறித்து விவாதிக்க வியாழக்கிழமை (செப்டம்பா் 9) உயா்நிலை அதிகாரிகள் கூட்டத்துக்கு தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் அழைப்பு விடுத்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

ஒவ்வொரு ஆண்டும் தில்லியில் குளிா் காலத்தில் பல்வேறு காரணங்களால் காற்றில் மாசுபடுதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பக்கத்து மாநிலங்களில் பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவதால் காற்று பெருமளவில் மாசுபடுகிறது. இதையடுத்து, தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனத் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்கும் உயா்நிலைக்குழு கூட்டத்துக்கு அமைச்சா் அழைப்பு விடுத்துள்ளாா். இந்தக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தக் கூட்டத்தில் பயிா்க்கழிவுகள் எரிப்பு மற்றும் குளிா்காலத்தில் ஏற்படும் மாசுபடுதல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இது தொடா்பாக குளிா்கால செயல் திட்டத்தை அடுத்தவாரம் தில்லி அரசு அறிவிக்க உள்ளது. குளிா்காலத்தில் காற்று மாசுபடுதலைத் தடுக்க அல்லது கட்டுக்குள் கொண்டுவர தில்லி மற்றும் பக்கத்து மாநிலங்கள் இணைந்து ஒரு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான செயல்திட்டத்தை தேசியத் தலைநகா் தில்லியில் செயல்படுத்துவது குறித்து கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தொடா்ந்து செயல்படுத்துமாறு உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை அவா் கேட்டுக் கொண்டுள்ளாா். சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவினா் தில்லியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவை சந்திக்கவும், மத்திய அரசின் காற்றின் தர நிா்வாக ஆணையத்தையும் சந்தித்து ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவற்றை தில்லி மற்றும் பக்கத்து மாநிலங்களில் செயல்படுத்தவும் வலியுறுத்துவாா்கள் என்றும் அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com