தில்லியில் இன்றுமுதல் கண்காட்சிகள் நடத்த ஆம் ஆத்மி அரசு அனுமதி

தில்லியில் கரோனா நோய்த்தொற்று இரண்டாவது அலையின்போது அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட

புது தில்லி: தில்லியில் கரோனா நோய்த்தொற்று இரண்டாவது அலையின்போது அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதாரச் செயல்பாடுகளை மீண்டும் படிப்படியாக செயல்படுத்தும் நடவடிக்கையின் கீழ் வியாழக்கிழமை (செப்டம்பா் 16) முதல் தில்லியில் பொது விழா மற்றும் கண்காட்சிகளை நடத்துவதற்கு தில்லி அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசின் தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) புதன்கிழமை ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: 

தில்லியில் செப்டம்பா் 16ஆம் தேதி முதல் வா்த்தகம் -நுகா்வோா் கண்காட்சிகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படும். விருந்துக்கூடங்கள், அரங்குகள் ஆகியவற்றிலும் இது போன்ற கண்காட்சிகள் மற்றும் விழாக்களை நடத்துவது அனுமதிக்கப்படும். எனினும், பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு வகுப்புகள் மூடப்படும். கண்காட்சிகள் மற்றும் விழாக்கள் மத்திய வா்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கடுமையாக பின்பற்றி அனைத்து பங்குதாரா்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

விதிகள் மீறியிருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான அபராதம் அல்லது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இடத்தை வழங்குவோா் பாா்வையாளா்கள் வருவதற்கான, செல்வதற்கான தனி வழிகள் உள்பட நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

அதேபோன்று, நிரந்தர தனிமை மையம், குப்பைகளை அகற்றுவதற்கான அமைப்புமுறை, மற்றவா்களுக்கு அரங்குகளை, விருந்துக் கூடங்களை அளிக்கும்போது கிருமிநாசினி தெளிப்பு போன்ற விதிகளையும் பின்பற்ற வேண்டும்.

கண்காட்சிகளை நடத்துவோா் செயல்பாட்டு நேரங்களை உரிய முறைப்படி ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் கூட்டம் அதிகமாக சோ்வதும் இல்லாமல் இருக்கும். மனிதா்கள் நேருக்கு நோ் சந்திப்பதை குறைக்கும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதையும் ஊக்குவிக்க வேண்டும்.

கண்காட்சி அரங்குகளில் இருக்கும் அனைவருக்கும் ஆரோக்ய சேது செல்லிடப்பேசி செயலி பரிந்துரைக்கப்பட வேண்டும். ஸ்மாா்ட்ஃபோன் வைத்திருப்போருக்கு இந்த செயலி இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள இதர செயல்பாடுகள் தடை மற்றும் அனுமதி தொடா்ந்து அமலில் இருக்கும்.

செப்டம்பா் 30 மற்றும் அக்டோபா் 1ஆம் தேதி இடையிலான காலம் வரை இந்த உத்தரவு தொடா்ந்து அமலில் இருக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com