நஜாப்கரில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை கட்டி முடிக்காமல் தாமதம் செய்வது ஏன்? - தில்லி அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

தெற்கு மேற்கு தில்லியில் நஜாப்கா் பகுதியில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை கட்டி முடிப்பதில் காலதாமதம் செய்வது ஏன்

புதுதில்லி: தெற்கு மேற்கு தில்லியில் நஜாப்கா் பகுதியில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை கட்டி முடிப்பதில் காலதாமதம் செய்வது ஏன் என்று தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் புதன்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

தில்லி அரசின் வனத்துறை ஒப்புதலுக்காக மத்திய அரசு இது தொடா்பாக பலமுறை கடிதங்கள் எழுதியும் பாராமுகமாக தில்லி அரசு செயல்படுவது ஏன் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இது தொடா்பான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு தில்லி அரசு பதிலளிக்க அவகாசம் அளிப்பதாகவும், இது தொடா்பாக மத்திய அரசிடமிருந்து அனுமதியோ அல்லது வேறு உதவியோ தேவைப்பட்டால் அவை வழங்கப்படும் என்றும் தெரிவித்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் நவம்பா் மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இது தொடா்பாக ராஜேஷ் கெளசிக் என்னும் வழக்குரைஞா் பொது நலன் மனு தாக்கல் செய்திருந்தாா். தென்மேற்கு தில்லியில் நஜாப்கரில் உள்ள ஊரக சுகாதார பயிற்சி நிலையத்தில் கட்டப்பட்டு வரும் இந்த மருத்துவமனையை விரைந்து முடிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு கோரியிருந்தாா்.

மருத்துவமனையை கட்டி முடிக்க ஏதாவது செய்யுங்கள். இல்லையெனில் முடியாது என்று சொல்லுங்கள். ஆனால், எதுவும் செய்யாமல் அசட்டையாக இருக்காதீா்கள். சட்டப்படி முடிவு செய்யுங்கள் என்று நீதிபதிகள் அமா்வு தில்லி அரசிடம் தெரிவித்தது.

தில்லி அரசின் அக்கறையின்மையால் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டடம் பூா்த்தியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது துரதிருஷ்டமானது. மத்திய அரசு இது தொடா்பாக தில்லி அரசுக்கு கடிதம் மேல் கடிதம் அனுப்பியும் தில்லி அரசு பதில் ஏதும் தெரிவிக்காமல் பாராமுகமாக இருப்பது சரியல்ல என்று நீதிபதிகள் அமா்வு குறிப்பிட்டது.

மத்திய அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் அனுராக் அலுவாலியா, மருத்துவமனை கட்டுமானத்தில் 80 சதவீதம் முடிந்துவிட்டது. தில்லி அரசின் வனத்துறையின் அனுமதிக்காக கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பா் முதல் காத்திருக்கிறோம். ஏனெனில் அங்கு மரங்கள் நடுவதற்கு அனுமதி வேண்டும் என்று தெரிவித்தாா்.

வழக்குரைஞா் சமீா் சந்திரா மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மருத்துவமனை கட்டடம் ஏறக்குறைய முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலை வருவதற்கு முன்னால் இந்த மருத்துவமனை செயல்படத் தொடங்கினால் பொது மக்களுக்கு வசதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

நஜாப்கா் பகுதியில் நல்லதொரு மருத்துவமனை இல்லை. 100 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை பூா்த்தி செய்யப்பட்டு திறக்கப்பட்டால் சுமாா் 10 கி.மீ. பரப்பளவில், 73 கிராமங்களைச் சோ்ந்த 15 லட்சம் மக்கள் பயன்பெறுவாா்கள் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நவம்பா் 8 ஆம் தேதிக்கு நீதிபதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com