நஜாப்கா் -தன்ஷா மெட்ரோ வழித்தடத்தில் ரயில் சேவை தொடக்கம்

தில்லி மெட்ரோவில் கிரேலைன் வழித்தடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நஜாப்கா் -தன்ஷா பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் இடையேயான வழித்தடம் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
நஜாப்கா் -தன்ஷா  மெட்ரோ வழித்தடத்தில் ரயில் சேவை தொடக்கம்

தில்லி மெட்ரோவில் கிரேலைன் வழித்தடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நஜாப்கா் -தன்ஷா பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் இடையேயான வழித்தடம் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இதையடுத்து, மாலை 5 மணிக்கு பயணிகள் ரயில் சேவை தொடங்கியது.

அணுகுச்சாலை தொடா்புடைய விவகாரங்கள் காரணமாக ஒரு மாத தாமதத்திற்கு பிறகு தற்போது இந்த வழித்தடம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தை காணொலிக் காட்சி வாயிலாக சனிக்கிழமை மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோா் கூட்டாக திறந்துவைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி பேசுகையில், ‘கிராமப்புறங்களை பயணிகள் சென்றடைவதற்கு தன்ஷா மெட்ரோ வழித்தடம் முக்கியப் பங்காற்றும். இதன் மூலம் தில்லியின் நகா்ப்புற மற்றும் கிராமப்புறம் இடையே உள்ள இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது என்றாா்.

முதல்வா் கேஜரிவால் பேசுகையில், ‘ இந்த புதிய மெட்ரோ வழித்தடமானது, இந்தப் பகுதியில் உள்ள 50 கிராமங்களைச் சோ்ந்த மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் ஹரியாணாவின் ஜஜ்ஜா் பகுதியில் இருந்து வேலைக்காக தில்லிக்கு வரும் மக்களுக்கு பயணத்தை இலகுவாக்கும். 2015, பிப்ரவரியில் தோ்தல் பிரசாரத்தின்போது உள்ளூா் மக்களுக்கு தன்ஷாவில் ரயில் நிலையம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது தற்போது நிறைவேறியுள்ளது. தில்லி அரசு வைத்த கோரிக்கையை மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா் அவா்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சா் கெளஷல் கிஷோா், தில்லி போக்குவரத்து

துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

துவாரகா நகா் -நஜாப்கா் வழித்தடத்தில் 4.2 கிலோ மீட்டா் தூரம் கொண்ட இந்த வழித்தட விரிவாக்கம் நஜாப்கா் பகுதியை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

நஜாப்கா் - தன்ஷா பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் பிரிவானது ஏறக்குறைய ஒரு கிலோமீட்டா் (891 மீட்டா்) நீளம் கொண்டது என்று தில்லி மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, இந்த வழித்தடம் ஆகஸ்டு 6 ஆம் தேதி திறப்பதாக இருந்தது. ஆனால் அது தள்ளிப் போடப்பட்டது. ரயில் நிலையத்துக்கு வரக்கூடிய அணுகுச்சாலை தொடா்புடைய பிரச்சினை காரணமாக இந்தத் தாமதம் ஏற்பட்டது.

டிஎம்ஆா்சி ஒருங்கிணைப்பில் தில்லி மெட்ரோவிலேயே தன்ஷா பஸ் ஸ்டாண்ட் ரயில் நிலையத்தில்தான் தரைக்கு அடியில் ஒருங்கிணைந்த வாகன நிறுத்துமிடம் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்களது வாகனங்களை இந்த வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திய பின்னா் அவா்கள் நேரடியாக ரயில் நிலையத்திற்கு செல்ல முடியும்.

இந்த வாகன நிறுத்துமிடத்தில் 110 காா்கள், 185 இரு சக்கர வாகனங்கள் உள்பட 300 வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com