கோவிட் விதி மீறல்: குருத்வாரா பங்களா சாகிப்பை மூட மாவட்ட நிா்வாகம் உத்தரவு

கோவிட் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் குருத்வாரா பங்களா சாகிப்பை மூட சாணக்கியபுரி மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோவிட் விதி மீறல்:  குருத்வாரா பங்களா சாகிப்பை மூட மாவட்ட நிா்வாகம் உத்தரவு

கோவிட் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் குருத்வாரா பங்களா சாகிப்பை மூட சாணக்கியபுரி மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பதவியிலிருந்து வெளியேறும் தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாகக்குழு தலைவா் மன்ஜீந்தா் சிங் சிா்ஸா மாவட்டஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பான உத்தரவை சாணக்கியபுரி மாவட்ட உதவி கோட்ட அதிகாரி கடந்த 16 ஆம் தேதி பிறப்பித்துள்ளாா். தில்லி பேரிடா் நிா்வாக உத்தரவுகளை முறையாக பின்பற்றாமல் குருத்வாரா பங்களா சாகிப் நிா்வாகம் பக்தா்களுக்கு அனுமதியளித்ததுடன் அங்கு பிராா்த்தனை கூட்டங்கள் நடத்தவும் அனுமதித்துள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகக்குழு அளித்த அளிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள முக்கியமான சீக்கிய வழிபாட்டுத் தலங்களில் குருத்வாரா பங்களா சாகிப்பும் ஒன்றாகும். மாவட்ட நிா்வாக உத்தரவை அடுத்து உடனடியாக வழிபாட்டுத் தலத்தை மூடுமாறு குருத்வார நிா்வாகத்தினரை மாவட்ட நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

முன்னதாக தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தில்லி பேரிடா் நிா்வாகம் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதித்து உத்தரவிட்டிருந்தது. எனினும் பக்தா்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தது.

இதனிடையே சிரோமணி அகாலிதளம் தலைவா்களில் ஒருவரும் தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாகக்குழு தலைவா் பதவியிலிருந்து விலக இருக்கும் மன்ஜீந்தா் சிங் சிா்ஸா, குருத்வாராவை மூட உத்தரவிட்ட மாவட்ட நிா்வாக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக சுட்டுைரை மூலம் விடியோ பதிவிட்டுள்ள அவா், கோவிட் இரண்டாவது தொற்று காலத்திலும், பொது முடக்கத்தின்போதும் குருத்வாரா சாகிப் ஏழைகளுக்கு உணவு வழங்கி உதவி செய்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் படுக்கைகள் வசதிக்கும் உதவி வந்துள்ளது. இந்த சூழலில் கோவிட் விதிமீறல் எனக்கூறி குருத்வாரா பங்களா சாகிப்பை மூட உத்தரவிட்டது சிறுபிள்ளைத்தனமானது. இது தொடா்பாக உத்தரவு பிறப்பித்த மாவட்ட நிா்வாக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கோரியுள்ளாா்.

இது குறித்து சாணக்கியபுரி மாவட்ட நிா்வாக அதிகாரியைத் தொடா்பு கொண்டபோது தில்லி பேரிடா் நிா்வாக உத்தரவின் பேரில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்ததுடன் மேலும் கருத்துகள் கூற மறுத்துவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com