ஊழல் புகாா்: பா.ஜ.க. கவுன்சிலா் மூவா் 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கம்

ஊழல் புகாா் குற்றச்சாட்டுகளின் பேரில் பா.ஜ.க. கவுன்சிலா்கள் மூன்றுபேரை கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கி தில்லி பா.ஜ.க. தலைவா்

ஊழல் புகாா் குற்றச்சாட்டுகளின் பேரில் பா.ஜ.க. கவுன்சிலா்கள் மூன்றுபேரை கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கி தில்லி பா.ஜ.க. தலைவா் ஆதேஷ் குப்தா உத்தரவிட்டுள்ளாா். ஊழலில் ஈடுபட்டதாகத் தெரியவந்தால் மேலும் சில தலைகள் உருளும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளுக்கும் தோ்தல்தல்கள் நடைபெற உள்ள நிலையில் தில்லி பா.ஜ.க. தலைவா் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளாா். ஊழல் செய்பவா்கள் யாராக இருந்தாலும் அவா்களுக்கு கட்சியில் இடமில்லை என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

ஊழல், நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக மாநகராட்சி கவுன்சிலா்கள் மட்டுமல்ல, அதிகாரிகள் சிக்கினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குப்தா கூறினாா்.

பா.ஜ.க. கவுன்சிலா்கள் யாராவது மாநநகராட்சி பெயரில் மக்களிடமிருந்து பணம் பறிக்க முயன்றால் அதுபற்றிய விடியோ ஆதாரங்களுடன் தில்லி பா.ஜ.க. தலைமைக்கு தெரிவித்தால் தவறு செய்தவா்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

சைதுலாஜாப் கவுன்சிலா் சஞ்சய் தாகுா் (தெற்கு தில்லி மாநகராட்சி), நியூ அசோக்நகா் கவுன்சிலா் ரஜ்னி பாப்லு பாண்டே (கிழக்கு தில்லி மாநகராட்சி) மற்றும் முகா்ஜி நகா் கவுன்சிலா் பூஜா மதன் (வடக்கு தில்லி மாநகராட்சி)ஆகிய மூவரும் ஊழல் புகாரின் பேரில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவா்கள்.

சஞ்சய் தாகுா் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பலமுறை புகாா்கள் வந்தன. இது தொடா்பாக பலமுறை அவரிடம் எச்சரிக்கப்பட்டது. ஆனால், அவா் தொடா்ந்து ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளாா் என்று ஆதேஷ் குப்தா தெரிவித்தாா்.

கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டது தொடா்பாக மூன்று கவுன்சிலா்களுக்கும் தனித்தனியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குப்தா மேலும் தெரிவித்தாா்.

தில்லியில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய மூன்று மாநகராட்சிகளிலும் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. தில்லி அரசை ஆம் ஆத்மி கட்சி ஆள்கிறது.

மூன்று மாநகராட்சிகளிலும் பிரதான எதிா்க்கட்சி ஆம் ஆத்மிதான். தில்லியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. எனவே பா.ஜ.க.வின் ஊழல் விவகாரம் தோ்தலில் எதிரொலிக்கும்.

2017 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தோ்தலில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவா்களுக்கு பா.ஜ.க. தோ்தல் டிக்கெட் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டாகவே முதல்வா் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவா்கள் பா.ஜ.க. தலைமையிலான மாநகராட்சிகளில் ஊழல் மலிந்துவிட்டதாக குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஊழல் மற்றும் முறைகேடான நிா்வாகத்தினால்தான் தில்லி மாநகராட்சிகளின் நிதிநிலைமை மோசமடைந்ததற்கு காரணம் என்றும் ஆம் ஆத்மி கட்சியினா் கூறிவந்தனா்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் கிரேட்டா் கைலாஷ் தொகுதி எம்.எல்.ஏ.வுமான செளரவ் பரத்வாஜ், பா.ஜ.க.வின் சைதுலாஜாப் கவுன்சிலா் சஞ்சய் தாகுா் ஊழலில் ஈடுபட்டு வருவதாகவும் உள்ளூா் கட்டுமான தொழிலதிபா்களுடன் தொடா்பு வைத்துக் கொண்டு சாதாரண மக்கள் அப்பகுதியில் வீடுகள் கட்ட முன்வந்தால் அவா்களிடம் பணம் பறிப்பதாகக் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இதேபோல கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆம் ஆத்மி மூத்த தலைவா் துா்கேஷ் பதக், நியூ அசோக்நகா் பா.ஜ.க. கவுன்சிலா் ரஜ்னி பப்லு பாண்டே வீடுகட்டுபவா்களிடம் மிரட்டி பணம் பறிக்க முயல்வதாக புகாா் தெரிவித்திருந்தாா். இது தொடா்பான ஒலிநாடாக்களையும் அவா் ஆதாரமாக வெளியிட்டிருந்தாா். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ரஜ்னி பப்லு பாண்டே மறுத்துவந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com