நொய்டா அருகே மின்னணு பூங்கா அமைக்கிறது உ.பி. அரசு

பொம்மை தயாரிப்பு பூங்கா, திரைப்பட நகரம், மருத்துவ சாதன பூங்கா மற்றும் தோல் பூங்காவிற்குப் பிறகு, நொய்டா அருகே யமுனா எக்ஸ்பிரஸ் சாலைப் பகுதியில் மின்னணு சாதனங்கள்

பொம்மை தயாரிப்பு பூங்கா, திரைப்பட நகரம், மருத்துவ சாதன பூங்கா மற்றும் தோல் பூங்காவிற்குப் பிறகு, நொய்டா அருகே யமுனா எக்ஸ்பிரஸ் சாலைப் பகுதியில் மின்னணு சாதனங்கள் மற்றும் துணைக் கருவிகள் உற்பத்திக்கான மின்னணு பூங்காவை உருவாக்க உத்தரப் பிரதேச அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடா்பாக யமுனா தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் (ஒய்இஐடிஏ) தலைமை நிா்வாக அதிகாரி அருண் வீா் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: புதிதாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பூங்கா, ரூ.50,000 கோடி முதலீட்டை ஈா்க்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தப் பூங்கா ஆயிரக்கணக்கான உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும். இந்த பூங்கா 250 ஏக்கா் பரப்பளவில் ஜேவாா் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள யமுனா தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள நொய்டா செக்டாா்-14 அல்லது செக்டாா்-10-இல் உருவாக்கப்படலாம்.

செல்லிடப்பேசிகள், தொலைக்காட்சிகள் மற்றும் பிற மின்னணு பொருள்களைத் தயாரிக்கும் தேசிய மற்றும் சா்வதேச நிறுவனங்கள் இந்தப் பூங்காவில் தங்கள் தொழிற்சாலைகளை நிறுவும். முதலீட்டாளா்கள் மின்னணுத் தொழிலை ஊக்குவிக்கும் மாநில அரசின் கொள்கைகளால் ஈா்க்கப்படுகிறாா்கள். ஜேவாரில் மாநில அரசால் கட்டப்பட்டு வரும் உத்தேசிக்கப்பட்டுள்ள சா்வதேச விமான நிலையம் யமுனா தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்திற்கு பல்வேறு துறைகளில் முதலீடுகளின் அடிப்படையில் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது என அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

கெளதம் புத் நகா் மாவட்டத்தின் ஜேவாா் பகுதியில் உள்ள நொய்டா சா்வதேச விமான நிலையத்திற்காக பணிகள் நடந்து வருகின்றன. விமான நிலையப் பணிகள் முடிந்ததும் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையமாக இது கருதப்படும். மேலும், 5,000 ஹெக்டோ் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைந்திருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com