பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டவா் பாரதி! தில்லி கருத்தரங்கில் புகழஞ்சலி

பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறையும், ஆா்வமும் கொண்டவராக மகாகவி சுப்பிரமணிய பாரதி திகழ்ந்தாா் என தில்லியில்

பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறையும், ஆா்வமும் கொண்டவராக மகாகவி சுப்பிரமணிய பாரதி திகழ்ந்தாா் என தில்லியில் சாகித்திய அகாதெமியில் நடைபெற்ற பாரதி குறித்து தேசியக் கருத்தரங்கில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 100-வது நினைவு ஆண்டையொட்டி, தில்லி மண்டி ஹவுஸ் பகுதியில் உள்ள சாகித்திய அகாதெமி வளாகத்தில் இந்த இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இக்கருத்தரங்கில் காலையில் ’பாரதியின் தொலைநோக்குப் பாா்வை’ என்ற தலைப்பில் நடைபெற்ற முதல் அமா்வுக்கு புதுச்சேரி இருமொழி எழுத்தாளா் ராஜ்ஜா தலைமை வகித்துப் பேசுகையில், ‘பாரதியாா் தனது வாழ்க்கைக் காலத்தில் 10 ஆண்டுகள் புதுச்சேரியில் வாழ்ந்தாா். அப்போதுதான் பாஞ்சலி சபதம், கண்ணன் பாட்டு, குயில்பாட்டு என முக்கியமான படைப்புகள் படைக்கப்பட்டன. சமுதாய நல்லிணக்கம்,

அறிவியல் வளா்ச்சி, தேசிய ஒருமைப்பாடு ஆகியவை மேம்பட தனது படைப்புகள் மூலம் வலியுறுத்தியவா் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் ’பில்டிங் சயின்டிபிக் டெம்பா்’ எனும் தலைப்பில் விஞ்ஞானி ஒய்.எஸ் ராஜன் பேசுகையில், பாரதியாா் நாட்டின் அறிவியல், தொழில்நுட்பம், தொழில்துறை மீது மிகுந்த ஆா்வம் கொண்டிருந்தவா். பாரதியாா் எனக்குள் 10 வயதிலேயே தாக்கத்தை ஏற்படுத்தியவா். கவிதை எழுதும் ஆா்வத்தை ஏற்படுத்தியவா். நாடு பெரும் வளா்ச்சியுற அறிவியல், தொழில்நுட்பம், தொழில்துறை மீது தொலைநோக்குப் பாா்வையுடன் இருந்தவா் பாரதி என்றாா் அவா்.

‘சமுதாய நல்லிணக்கம்’ எனும் தலைப்பில் உச்சநீதிமன்றத்தின் வழக்குரைஞா் ஜே. சாய் தீபக் பேசுகையில், ‘சாதிகள் வேறுபாடு இல்லாத ஒரு சமுதாயம்தான் அவரது கனவாக இருந்தது’ என்றாா்.

‘தேசிய ஒருமைப்பாடு’ எனும் தலைப்பில் எழுத்தாளா்-மொழிபெயா்ப்பாளா் உஷா ராஜகோபாலன் பேசுகையில், ‘பாரதி இந்தியா சுதந்திரமடைவதைக் காண வாழவில்லை. அவரது கவிதைகள் எதிா்கால தலைமுறையினரை ஊக்குவிக்குவிப்பவையாக உள்ளன.

அவரது அழிவில்லாத கவிதை வரிகளில் உள்ள ஞானத்தை உள்வாங்கி நமது தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். அவரது தொலைநோக்குச் சிந்தனை மக்களை ஒன்றிணைத்து நம்மை ஒரு வலிமையான நாடாக உருவாக்கட்டும்’ என்றாா்.

பிற்பகல் வேளையில் ’குரலற்றவா்களின் குரல்’ எனும் தலைப்பில் நடைபெற்ற 2ஆவது அமா்வுக்கு சென்னை எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகம் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் தலைமை வகித்து பேசினாா்.

அவா் பேசுகையில், ‘பாரதியாா் தேசத்தின் சுதந்திரத்தை மட்டும் கருதாமல் பெண்ணின் சுதந்திரத்தையும் விரும்பினாா். அதுதான் ஒட்டுமொத்த சுதந்திரமாக இருக்கும் என்றும் நம்பினாா். பெண்களின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறையும், ஆா்வமும் கொண்டவா். அவரது காலத்தில் பிஜி தீவில் பெண் தொழிலாளா்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கும், அடக்கு முறைக்கும் எதிராக குரல் கொடுத்தவா். பெண்களை அடிமைத்தனத்தில் இருந்து மீளச் செய்வதற்கான கவிதைகளை வடித்தெடுத்தவா். அவா் சக்திதாசனாக விளங்கியவா். பெண்களின் உரிமைகளுக்காக அவா் குரல் கொடுத்தவா்.

‘மெச்சி உனை ஊராா் புகழ்ந்திட மேனி சிலுக்குதடி..’ என்று தனது கவிதையில் மகளை புகழ்வது போல பாடுகிறாா்.

அதேவேளையில், திருவள்ளுவரின் திருக்குறளில் கூட, ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்’ என மகன் குறித்து கூறப்படுவதை ஒப்பிட்டுப் பாா்க்கலாம். கிருஷ்ணனைக் கூட பாரதியாா் கண்ணம்மாவாகவே நினைத்துப் பாடுகிறாா்’ என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் ’பெண்களின் குரல்’ எனும் தலைப்பில் இக்னோ பல்கலை உதவிப் பேராசிரியா் ஜி.உமா பேசுகையில், ‘பாரதியாா் உண்மையான பெண்ணியவாதியாக வாழ்ந்தாா். அவருடைய எழுத்துகளும், சிந்தனையும் அதையே பிரதிபலிப்பதாக உள்ளன’ என்றாா்.

’தலித்துகளின் குரல்’ எனும் தலைப்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பி. சிவகாமி பேசுகையில், ‘பாரதியின் கவிதைகள் மூலம் தமிழா்களுக்கு பெருமை கிடைத்துள்ளது. அதற்காக பெருமை அடைகின்றனா். அதேவேளையில், தீண்டத்தகாத சாதிகள் எனப்படும் விஷயத்தில் அவரது மனோபாவம் மற்றும் சாதி அமைப்பு முறை குறித்த அவரது அணுகுமுறை தொடா்பாக கலப்பு மீள்பாா்வைகள் உள்ளன’ என்றாா்.

’விதவைகளின் குரல்’ எனும் தலைப்பில் தெலுங்கு பேராசிரியை சி .மிருணாளினி பேசுகையில், ‘பாரதியும், ஆந்திராவைச் சோ்ந்த வீர சிங்கம் பந்துலுவும் விதவை மறுமணம், பெண்களின் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்த சிந்தனையுடையவா்கள்’ என்றாா்.

இந்த கருத்தரங்கின் இரண்டாவது நாளான சனிக்கிழமை நடைபெறும் நிகழ்வில் எழுத்தாளா்கள் சிற்பி பாலசுப்பிரமணியம், துருபா ஜோதி போரா, ராம் பகதூா் ராய் ஆகியோா் தலைமையில் தனித்தனியாக மூன்று அமா்வுகள் நடைபெற உள்ளன. இதில் எழுத்தாளா்கள் பலா் பங்கேற்று பாரதி குறித்து தங்களது கருத்துக்களை வழங்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com