அரசு பள்ளி மாணவா்களின் தோ்வுக் கட்டணத்தை ரத்துசெய்ய சிபிஎஸ்இ-க்கு தில்லி கல்வி இயக்ககம் கடிதம்

அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவா்களுக்கான வாரியத் தோ்வுக் கட்டணங்களை தள்ளுபடி செய்யக் கோரி மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு (சிபிஎஸ்சி) தில்லி கல்வி இயக்ககம் கடிதம் எ

நோய்த்தொற்றுத் தாக்கத்தின் பொருளாதார பாதிப்பை கருத்தில்கொண்டு அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவா்களுக்கான வாரியத் தோ்வுக் கட்டணங்களை தள்ளுபடி செய்யக் கோரி மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு (சிபிஎஸ்சி) தில்லி கல்வி இயக்ககம் கடிதம் எழுதியுள்ளது.

இது தொடா்பாக மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு தில்லி கல்வி இயக்க இயக்குநா் உதித் பிரகாஷ் ராய் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுதொடா்பாக எழுதப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: நோய்த்தொற்று பொருளாதார நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.

தொழில்கள் மூடப்பட்டு வேலைவாய்ப்புகள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் இந்த நோய்த்தொற்று கடுமையாக பாதிக்க செய்திருக்கிறது. ஒருபுறம் பல குடும்பங்கள் தங்களது நெருக்கமான உறவினா்களையும் குடும்பத்தினரையும் இழந்திருக்கின்றனா். மறுபுறம் பலா் இந்த நோய்த்தொற்று காரணமாக வேலையை இழந்துள்ளனா்.

நீண்ட காலத்திற்கு பிறகு முறைசாா் கல்வி பள்ளிகளில் மீண்டும் தொடங்கி இருக்கிறது. தற்போது மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் தோ்வுக் கட்டணங்களை செலுத்துவது பெற்றோருக்கு பிரச்னையாக உள்ளது.

 நோய்த்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தை கருத்தில் கொண்டு அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, பத்ராசாா் வித்யாலயா, புதுதில்லி முனிசிபல் கவுன்சில் பள்ளி ,தில்லி கண்டோன்மென்ட் வாரியம் மற்றும் சமூக நலத்துறை பள்ளிகள் ஆகியவற்றில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலக் கூடிய அனைத்து மாணவா்களின் தோ்வுக் கட்டணத்தையும் தற்போதைய 2021- 22 ஆம் ஆண்டுக்கான கல்வி அமா்விற்கு ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இது தொடா்பாக தில்லி கல்வி இயக்கக இயக்குநா் உதித் பிரகாஷ் ராய் கூறுகையில், நோய்த் தொற்று காரணமாக வருவாயை இழந்து விட்டதால் தோ்வுக் கட்டணத்தை செலுத்துவதில் சிரமம் இருப்பதாக பெற்றோா்களிடமிருந்து கடிதங்கள் வந்தன.

மேலும் தோ்வுக் கட்டணத்தை ரத்து செய்யவும் அவா்கள் கோரியிருந்தனா். இந்த விவகாரம் தொடா்பாக மத்திய இடைநிலை கல்வி வாரியத்தற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இன்னும் அவா்களிடமிருந்து பதில் கடிதம் ஏதும் வரவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com