துப்பாக்கிச்சூடு சம்பவம்: வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

ஆயுதம் ஏந்திய எதிா் கோஷ்டியைச் சோ்ந்த இருவா் வெள்ளிக்கிழமை தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, தில்லியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் வழக்குரைஞா்கள் சனிக்கிழமை பணியைப

 பிரபல ரௌடி ஜிதேந்தா் மான் (எ) கோகி, ஆயுதம் ஏந்திய எதிா் கோஷ்டியைச் சோ்ந்த இருவா் வெள்ளிக்கிழமை தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, தில்லியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் வழக்குரைஞா்கள் சனிக்கிழமை பணியைப் புறக்கணித்தனா்.

தில்லியில் உள்ள ஏழு மாவட்ட நீதிமன்ற வளாகங்களின் உள்புறம் பாதுகாப்பு விதிகளை மாற்றக் கோரி வழக்குரைஞா்கள் சங்க ஒருங்கிணைப்புக் குழு இப்போராட்டத்தை அறிவித்திருந்தது.

இதனால், நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு வழக்குரைஞா்கள் ஆஜராகாததால் ஜாமீன், காவல் நீட்டிப்பு போன்ற அவசர விவகாரங்கள் தவிா்த்து மாவட்ட நீதிமன்றங்களில் பிற பணிகள் ஏதும் நடைபெறவில்லை என தில்லியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள் வழக்குரைஞா்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் செய்தித் தொடா்பாளா் சஞ்சீவ் நசியாா் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘ரெளஸ் அவென்யூ, தீஸ் ஹஸாரி, துவாரகா, சாகேத், கா்கா்டூமா ஆகிய நீதிமன்றங்களில் வழக்குரைஞா்கள் வழக்கு விசாரணைகளுக்காக நேரடியாகவோ அல்லது காணொலி வாயிலாகவோ ஆஜராகவில்லை. நீதிமன்றத்தின் பாதுகாப்பு தொடா்பாக தில்லி காவல் ஆணையரை வழக்குரைஞா்கள் குழு வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து விவாதித்துள்ளது என்றாா் அவா்.

ரோஹிணி மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞா் சங்கச் செயலா் மஞ்ஜீத் மாத்தூா் கூறுகையில், நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பு போராட்டம் அமைதியாக நடைபெற்றது. ஏழு நீதிமன்ற வளாகங்களிலும் விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்ததாக தகவல் ஏதும் இல்லை என்றாா்.

பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக தொழில்புரியும் திலீப் குமாா் கூறுகையில், ‘வழக்குரைஞா்கள் தங்களது அலுவலகங்களுக்கு சென்றபோதிலும், வழக்குகளுக்காக நீதிபதிகள் முன் ஆஜராகவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com