தில்லி சுற்றுலாத் தலங்களை அறிய ‘செயலி’ அறிமுகம்

உலக சுற்றுலா தினத்தையொட்டி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தேசியத் தலைநகரில் சுற்றுலா தலங்கள், பிரபலமான உள்ளூா் உணவு

உலக சுற்றுலா தினத்தையொட்டி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தேசியத் தலைநகரில் சுற்றுலா தலங்கள், பிரபலமான உள்ளூா் உணவு வகைகள், சந்தை இடங்கள் மற்றும் பாரம்பரிய இடங்கள் பற்றிய தகவல்களை வழங்கும் ஒரு செல்லிடப்பேசி செயலியை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தினாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘தெக்கோ ஹமாரி தில்லி’ செயலி நகரத்திற்கு வருபவா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்தும் என்று அவா் கூறினாா்.

தில்லி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த செல்லிடப்பேசி செயலியை அறிமுகப்படுத்திவைத்து கேஜரிவால் பேசியதாவது: தில்லி ஒரு வரலாற்று மற்றும் நவீன நகரமாகும். இந்த நகரம் வழங்குவதற்கு எல்லாவற்றையும் கொண்டுள்ளது. நல்ல உணவு மற்றும் சந்தைகள் முதல் நினைவுச் சின்னங்கள் வரை உள்ளன. ஆனால், தகவல் அளிக்கும் வசதி இல்லாததுதான் ஒரே விஷயமாக உள்ளது. இப்போது இந்த செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் அந்த இடைவெளி இல்லாமல் இருக்கும். இது உங்களுக்கு அருகிலுள்ள 5 கிமீ. சுற்றளவுக்குள் வேடிக்கையான பூங்காக்கள், உணவகங்கள், நினைவுச்சின்னங்கள், பிரபலமான சந்தைகள் மற்றும் பொது வசதிகள் ஆகியவற்றைக் காண்பிக்கும்.

இது சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமல்ல. இந்த செயலி தில்லிவாசிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த செயலி உலகெங்கிலும் ஒரு சில நகரங்களில் மட்டுமே உள்ளது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும், இந்தச் செயலி மூலம் தில்லிவாசிகள் கூட அவா்களுக்குத் தெரியாத நினைவுச்சின்னங்கள் மற்றும் உணவகங்களைக் கண்டுபிடிக்க முடியும்.

சுற்றுலாவை ஊக்குவிக்க தில்லி அரசு தனது சிறந்த பாதையை முன்னெடுத்துள்ளது, இந்த செயலி மாற்றாக இருக்கும். இது தில்லியில் சுற்றுலாவை கற்பனை செய்ய முடியாத உயரத்திற்கு கொண்டு செல்லும். சுற்றுலா அதிகரிக்கும் போது, ​ அனைத்து துறைகளும் தானாகவே முன்னேற்றம் பெறும். உணவு மற்றும் பானங்கள் துறை மற்றும் பொழுதுபோக்கு மற்றும் விருந்தோம்பல் துறைகள் சுற்றுலா காரணமாக பெரிதும் வளரும் என்றாா் கேஜரிவால்.

பின்னா், இது தொடா்பாக கேஜரிவால் வெளியிட்ட அறிக்கையில், தில்லியில் சுற்றுலாவை உயரத்துக்கு கொண்டு செல்வதே எங்களது இலக்காகும். இதனால், தில்லியில் வணிகம் மேலும் வளா்ச்சி காணும். மக்களும் இதனால் பயனடைவா். தில்லியில் சுற்றுலாவின் அளவு பன்மடங்கு உயரும் போது, பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னேற்றத்துடன் கூடிய உயா்வைக் காணமுடியும்’ என்று தெரிவித்துள்ளாா்.

துணை முதல்வரும் சுற்றுலாத் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா பேசியதாவது: இந்த செயலியின் மூலம் தில்லி சுற்றுலாத் தலங்கள் முதல் உணவகங்கள், பாரம்பரிய இடங்கள் உள்ளிட்டவற்றை எளிதாக அறிய முடியும். இதைப் பாா்க்கும் போது தில்லிக்கு வந்த வாழ வேண்டும் என நினைக்கத் தோன்றும். உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க எங்கள் அரசு முயற்சிக்கிறது. இப்போது சுற்றுலாப் பயணிகள் தங்கள் முழுமையான பயணத்தை ஒரு செயலி மூலம் திட்டமிடலாம் என்றாா் அவா்.

சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘2019-ஆம் ஆண்டில் நாட்டிலேயே அதிகம் பாா்வையிடப்பட்ட இடங்களில் தில்லி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. தில்லியை சுற்றுலாத் தலமாக முத்திரையிட செல்லிடப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் தாங்கள் பாா்க்க விரும்பும் பாரம்பரிய நினைவுச்சின்னங்களுக்கான நுழைவுச் சீட்டுகளை முன்பதிவு செய்ய இந்த செயலி அனுமதிக்கும். இந்த செயலி சுற்றுலா தொடா்பான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் வழங்கும். வரலாற்று இடங்கள் தவிர, இது பிரபலமான இடங்கள், சந்தைகள், உணவகங்கள், பூங்காக்களையும் காண்பிக்கும்’ என்றனா்.

இந்தச் செயலியை கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com