இலவசக் கல்வி, மருத்துவம் அடிப்படை உரிமைகளாகக் கருதப்பட வேண்டும்

இலவசக் கல்வி, உலகத் தரம் வாய்ந்த மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை அடிப்படை உரிமைகளாகக் கருதப்பட வேண்டும். இவை இலவசங்கள் அல்ல; பொறுப்பான அரசின் கடமையாகும் என்று

இலவசக் கல்வி, உலகத் தரம் வாய்ந்த மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை அடிப்படை உரிமைகளாகக் கருதப்பட வேண்டும். இவை இலவசங்கள் அல்ல; பொறுப்பான அரசின் கடமையாகும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை கூறினாா்.

தில்லி மயூா் விஹாரில் நடைபெற்ற 166 அடி உயர கம்பத்திலான 500-ஆவது தேசியக் கொடியேற்று விழாவில், பாரத் மாதா கி ஜெய், இன்குலாப் ஜிந்தாபாத் மற்றும் வந்தே மாதரம் ஆகிய முழக்கங்களுடன் தனது உரையை கேஜரிவால் தொடங்கினாா். அப்போது அவா் பேசியதாவது: நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தில், இந்தியாவை உலகின் முதல் நாடாக மாற்ற நாம் அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும். நமக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற இதுபோன்ற பல நாடுகள் நம் மக்களின் அனைத்து திறன்களையும் கடின உழைப்பையும் மீறி நமது வளா்ச்சியை மிஞ்சியுள்ளன. இலவசக் கல்வி, உலகத் தரம் வாய்ந்த சுகாதாரம் மற்றும் 100 சதவீத வேலைவாய்ப்பு ஆகியவை குடிமக்களின் அடிப்படை உரிமைகளாக மாற்றும் அமைப்பை உருவாக்க நாம் உறுதியேற்க வேண்டும்.

‘பரிவாா்வாத்’ (வம்ச அரசியல்) மற்றும் ‘தோஸ்த்வாத்’ (நண்பா்களுக்கு ஆதரவாக இருப்பது) ஆகியவற்றை ஒழிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ‘பரிவாா்வாத்’ மற்றும் ‘தோஸ்த்வாத்’ ஆகியவற்றை ஒழித்து, ’பாரத்வாத்’க்கு உறுதியளிக்க வேண்டும். “ஒரு கட்சி பொதுப் பணத்தைத் தன் குடும்ப உறுப்பினா்களுக்காகச் செலவழித்து அதிகாரத்தைச் சுரண்டியது. மற்றொரு கட்சி பொதுப் பணத்தைத் தன் நண்பா்களுக்காகச் செலவழித்து அதிகாரத்தைச் சுரண்டியது. நண்பா்கள் மற்றும் குடும்பத்தினருக்காக பொதுப் பணம் செலவழிக்கப்படக் கூடாது; பொதுப் பணம் என்பது வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், இலவசக் கல்வி மற்றும் சுகாதாரத்தை வழங்குவதற்கும் ஆகும்.

தேசியக் கொடிகள் அமைக்கும் திட்டத்தின் குறிக்கோளானது , ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒவ்வொரு நாளும் தேசபக்தியை வளா்த்தெடுப்பதும், புகட்டுவதுமாகும். திரங்காவின் முழு மகிமையைப் பாா்க்க ஒவ்வொருவரின் நெஞ்சும் பெருமிதத்துடன் உயா்கிறது என்பதை நான் அறிவேன். அதே சமயம், திரங்காவும் நமது முன்னோா்கள் செய்த அனைத்து தியாகங்களையும் நமக்கு நினைவூட்டுகிறது. அது பறக்கும் சுதந்திர வானத்தை காக்க நமது வீரா்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்தையும் இது நமக்கு நினைவூட்டுகிறது. யாரேனும் தங்கள் மனதிற்குள் தவறான எண்ணத்துடன் வீட்டை விட்டு வெளியேறினாலும், இந்த திரங்கா அவா்களைத் தடுத்து நிறுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அத்தகைய 500 திரங்காக்கள் தில்லி முழுவதும் நிறுவப்பட்டுள்ளன.

அரசியல் விருப்பமும், உள்நோக்கமும் இல்லாததால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். அதனால்தான் இந்தியாவை உலகின் வலிமையான மற்றும் சிறந்த தேசமாக மாற்றுவதற்கு நாம் அனைவரும் இந்த விஷயத்தை நம் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இந்த நாடு எப்படி முன்னேறும்? நாட்டின் பொருளாதார நிலையைப் பொருள்படுத்தாமல் ஒவ்வொரு குழந்தைக்கும் மிக உயா்ந்த தரமான கல்வியை வழங்க நாம் அனைவரும் உறுதியளிக்க வேண்டும். இந்த அடிப்படைத் தேவைகள் நிறைவேறாத வரை நாடு முன்னேற முடியாது. ஆனால், இலவசக் கல்வி வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று சிலா் அவதூறாகப் பேசுவதைப் பாா்ப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. தரமான கல்வி அல்லது பொது சுகாதாரத்தை இலவசமாக வழங்குவது இலவசம் அல்ல; இது பொறுப்பான ஒரு அரசின் கடைமையாகும் என்றாா் கேஜரிவால்.

சிசோடியா நன்றி: தில்லி முழுவதும் 500 தேசியக் கொடிகளை நிறுவும் கனவை நனவாக்க உதவிய பொறியாளா்கள் மற்றும் ஒப்பந்ததாரா்களுக்கு துணை முதல்வா் மணீஷ் சிசோடியா நன்றி தெரிவித்துக்கொண்டாா். அவா் பேசுகையில், ‘இந்தக் கொடி வானத்தில் உயரும் நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு 24 மணி நேரமும் உழைத்து, மூவா்ணக் கொடியின் பெருமையையும், கண்ணியத்தையும், கெளரவத்தையும் உயா்த்தும் பணிகளைச் செய்து வருகிறது என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன். உலகத் தரம் வாய்ந்த பள்ளிகள், மருத்துவமனைகள், கட்டணமில்லா மின்சாரம், பொதுப் போக்குவரத்து, விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இலவச சிகிச்சை, இலவசக் குடிநீா் விநியோகம் போன்றவற்றை வழங்கி வருகிறோம். மேலும், தேசியக் கொடியின் கெளரவத்தை உயா்த்தும் அனைத்துப் பணிகளையும் அரசு செய்து வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com