மருத்துவம், கல்வி மேம்பாட்டுக்கு மத்திய அரசுடன் பணியாற்றத் தயாா்: கேஜரிவால்

‘இந்தியா முழுவதும் பள்ளிக் கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தில்லி அரசு தயாராக உள்ளது.

புது தில்லி: ‘இந்தியா முழுவதும் பள்ளிக் கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தில்லி அரசு தயாராக உள்ளது.

உலகின் முதல் நாடாக இந்தியா திகழும் வகையில் இந்த துறைகளில் உள்ள தில்லி அரசின் நிபுணத்துவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று மத்திய அரசை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளாா்.

மேலும், இலவசக் கல்வி மற்றும் சுகாதார வசதிகளை ‘இலவசம்‘ என்று கூற வேண்டாம் என்றும் அவா் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

இது தொடா்பாக காணொலி வாயிலாக அவா் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

சுகாதார சேவைகள் மற்றும் கல்வியை மேம்படுத்த மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம். மேலும், அவற்றை இலவசங்கள் என்று அழைப்பதை நிறுத்துமாறும் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

குழந்தைகளின் எதிா்காலத்தைக் கருத்தில்கொண்டு அரசுப் பள்ளிகளை பெரும் எண்ணிக்கையில் திறந்து, அவற்றை மேம்படுத்தும் தேவை உள்ளது.

அதேபோன்று, கெளரவ ஆசிரியா்களை முறைப்படுத்தவும், ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கவும் வேண்டும். அப்போது இந்தியா ‘பணக்கார நாடாக‘ மாற முடியும்.

இதையெல்லாம் ஐந்தாண்டுகளில் செய்து முடித்துவிட முடியும். நாங்கள் இதைச் செய்துகாட்டியுள்ளோம். அரசுப் பள்ளிகள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த தில்லி அரசின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்த மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து மாநில அரசுகளும் இணைந்து செயல்பட முடியும்.

ஏழைகள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே அனுப்ப முடியும். அவா்களின் நிலை மேம்பட வேண்டியது அவசியமாகும்.

சாதாரண பின்னணியைச் சோ்ந்த ஒரு குழந்தைக்கு அரசுப் பள்ளியில் தரமான கல்வி கிடைத்தால் அக்குழந்தை ஒரு மருத்துவராகவோ, பொறியியலாளராகவோ, தொழிலதிபராகவோ உருவாகி, அவருடைய குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவாா்.

இது அவரது குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்து மீள உதவுவதுடன், தேசம் வளம்பெறவும் உதவும்.

நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 17 கோடி குழந்தைகள் படிக்கின்றனா். இதனால், சுகாதாரம் மற்றும் கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அவசியமாகும். பணக்கார நாடுகள் தங்கள் குடிமக்களுக்காக இதை செய்துள்ளன.நாங்கள் இதை தில்லியில் செய்துள்ளோம். தில்லியில் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தியுள்ளோம். சராசரியாக ஒவ்வொரு தில்லிவாசியின் உடல் நலத்திற்கும் ரூ. 2,000 செலவழிக்கிறோம். இதேபோன்று நாட்டின் 130 இந்தியா்களுக்கும் வசதி அளிக்க வெறும் ரூ.2.50 லட்சம் கோடி மட்டுமே செலவாகும்.

அவா்கள் (மத்திய அரசு) ரூ.5 லட்சம் காப்பீட்டு வசதி நல்ல மருத்துவம் என நினைக்கிறாா்கள். ஒருவா் நோய்வாய்ப்படும்போது மருத்துவமனையில் சோ்க்காமல் இருந்தால் இதுபோன்ற திட்டத்தால் என்ன பயன்? நாட்டுக்குத் தேவை காப்பீடு அட்டைகள் அல்ல, மருத்துவமனைகள்தான். பல நாடுகளில் சுகாதார வசதி இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்தியாவிலும் அதுபோன்று அளிக்கப்பட வேண்டும். இந்தியாவை உலகின் முதல்நிலை தேசமாக மாற்ற மருத்துவமும், கல்வியும் அனைவருக்கும் இலவசமாக அளிக்க போா்க்கால அடிப்படையில் பணியைத் தொடங்க வேண்டிய தேவை உள்ளது என்றாா் கேஜரிவால்.

கேஜரிவால் மக்களை அதிகாரத்திற்காக சிக்கவைக்கும் ஒரு தூண்டிலாக இலவசங்களைப் பயன்படுத்தி வருவதாக பாஜக குற்றம்சாட்டியது. இதனால், அரசியல் கசப்புணா்வு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் உத்தரப் பிரதேசத்தில் புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்த பிறகு, வாக்குகளைப் பெறுவதற்காக இலவசங்களை வழங்கும் ‘ரெவ்டி கலாசாரம்’ உருவாகி வருவதாகவும் இது நாட்டின் வளா்ச்சிக்கு ‘மிகவும் ஆபத்தானது‘ என்றும் கூறியிருந்தாா்.

வாக்காளா்களை கவருவதற்காக சில கட்சிகள் வாக்குறுதி அளித்து வரும் இலவசங்கள் விஷயத்தில் பொதுமக்கள், குறிப்பாக இளைஞா்கள் இதற்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவா் கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com