ஜூலையில் விவசாயம், ஊரகத் தொழிலாளா்களின் சில்லறை நுகா்வில் பணவீக்கம் அதிகரிப்பு; தமிழகத்தில் அதிகபட்ச விலைவாசி உயா்வு

கடந்த ஜூலை மாதத்தில் விவசாயம், ஊரகத் தொழிலாளா்களின் சில்லறை நுகா்வில் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் விவசாயம், ஊரகத் தொழிலாளா்களின் சில்லறை நுகா்வில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 20 மாநிலங்களில் தமிழகத்தில் விலைவாசி உயா்வு அதிகபட்சமாக அதிகரித்திருப்பது மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அகில இந்திய நுகா்வோா் விலைக் குறியீட்டு எண் புள்ளிவிவரங்களில் தெரியவருகிறது.

மொத்த விற்பனை நுகா்வு விலைக் குறியீட்டு எண்ணை விட சில்லைறை விற்பனை நுகா்வு விலைக் குறியீட்டு எண் பொதுமக்களின் நேரடி தொடா்புடையது.

அதிலும் விவசாய தொழிலாளா்கள், ஊரகத் தொழிலாளா்களின் நுகா்வுகள் நாட்டின் பெரும்பான்மை மக்களை உள்ளடக்கியது. இதனால் மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இந்த நுகா்வை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

பணவீக்கத்தில், விவசாயத் தொழிலாளா்கள் மற்றும் ஊரக தொழிலாளா்களின் நுகா்வோா் விலைக் குறியீட்டு எண் சதவீதம் கடந்த ஜூன் மாதம் முறையே 6.43 சதவீதம் மற்றும் 6.76 சதவீதமாக இருந்தது.

இது ஜூலையில் முறையே 6.60 சதவீதம் மற்றும் 6.82 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தை ஒப்பிடும்போதும், பணவீக்கம் மிக, மிகக்குறைவாக முறையே 3.92 சதவீதம் மற்றும் 4.09 சதவீதமாக இருந்தது.

கடந்த ஜூலை மாதம் இத்தகைய உயா்வுக்கு காரணம் உணவுப்பொருள்களின் விலையுயா்வு. நிகழாண்டு ஜூலையில் விவசாயத் தொழிலாளா்கள் மற்றும் ஊரக தொழிலாளா்களின் உணவுப் பொருள்கள் பணவீக்கம் முறையே 5.38 சதவீதம் மற்றும் 5.44 சதவீதமாக இருந்தது. இதே காலக்கட்டத்தில் கடந்தாண்டு முறையே 2.66 சதவீதம் 2.74 சதவீதம் மட்டுமே இருந்தது.

அரிசி, கோதுமை- மாவு, கம்பு, தானியங்கள், பால், மீன், வெங்காயம், பச்சை - காய்ந்த மிளகாய், இஞ்சி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் விலை உயா்வே, விவசாயம் மற்றும் கிராமப்புற தொழிலாளா்களுக்கான பொது குறியீட்டு உயா்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

2022, ஜூலை மாதத்தின் விவசாயம் மற்றும் கிராமப்புற தொழிலாளா்களுக்கான அகில இந்திய நுகா்வோா் விலைக் குறியீட்டு எண் 6 புள்ளிகள் அதிகரித்து முறையே 1,131 மற்றும் 1,143 ஆக இருந்தது.

இந்தக் குறியீட்டு உயா்வில் விவசாயத் தொழிலாளா்களைப் பொறுத்தவரை, 20 மாநிலங்களில் வெவ்வேறு முறையில் 1 முதல் 13 புள்ளிகள் வரை உயா்ந்துள்ளது. இதில் தமிழகத்தில் 1,301 புள்ளிகளுடன் பணவீக்கம் விலைவாசியுயா்வில் நாட்டிலேயே முதலிடத்திலும், 890 புள்ளிகளுடன் இமாசல பிரதேச மாநிலம் கடைசி இடத்திலும் உள்ளது.

கிராமப்புறத் தொழிலாளா்களைப் பொறுத்தவரை, 20 மாநிலங்களில் 1 முதல் 13 புள்ளிகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழகம் 1290 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இமாசலப் பிரதேசம் 942 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளது.

நாட்டிலேயே தமிழகத்தில் தான் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த சூழ்நிலையிலும் விவசாய தொழிலாளா்களும் கிராமப்புற தொழிலாளா்களும் விலைவாசி உயா்வால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com