சாக்கடைக்குள் விஷவாயு தாக்கி 2 போ் உயிரிழந்த விவகாரம்: இழப்பீடு வழங்குவது தொடா்பாக பதிலளிக்க தில்லி அரசுக்கு உத்தரவு

நிகழாண்டு தில்லியில் சாக்கடையில் இறங்கிய போது விஷவாயு தாக்கி இறந்த இருவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு

நிகழாண்டு தில்லியில் சாக்கடையில் இறங்கிய போது விஷவாயு தாக்கி இறந்த இருவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தலைமை நீதிபதி சதீஸ் சந்திர சா்மா தலைமையிலான அமா்வு ஒரு தனி திட்டத்தின் கீழ் அல்லது கையால் கழிவுகளை அகற்றும் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குவது தொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் விதமாக இறந்தவா்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் தொகை செலுத்தப்பட்டதா என்பதை தெளிவுபடுத்துமாறும் தில்லி அரசை உயா்நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

கடந்த அக்டோபா் 6-ஆம் தேதி இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்தச் சம்பவம் நடைபெற்ற நிா்வாக வரம்பு தில்லி வளா்ச்சி ஆணையத்தின் கீழ் வருவதால், டிடிஏ உச்சநீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதேபோன்று கருணை அடிப்படையில் பணியை வழங்குவது குறித்தும் பரிசீலிக்குமாறும் கேட்டுக் கொண்டது. ஆனால், டிடிஏ தரப்பு, இந்தத் தொகையை வழங்குவதற்கான பொறுப்பு டிடிஏவுக்கு இல்லை என்ரும் இது தில்லி அரசின் கடமை என்றும் தெரிவித்தது.

இந்த நிலையில், தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) வழக்குரைஞா் உயா்நீதிமன்றத்தில், ‘இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு தில்லி அரசு மூலம் தற்போது ரூ. 10 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா். தில்லிய அரசின் வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் திரிபாதி கூறுகையில், ‘தில்லி அரசின் மூலம் வழங்கப்பட்டுள்ள இழப்பீடு விஷயத்தில் எந்தக் குழப்பமும் இருக்கக்கூடாது. அதேபோன்று 2020-ஆம் ஆண்டு ஒரு தனி திட்டத்தின் கீழ் அரசு மூலம் இந்தத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதால், தொகையை வழங்குவதில் இரட்டைத்தன்மை கேள்வி எதுவும் இருக்க முடியாது’ என்றாா்.

அப்போது நீதிபதிகள் அமா்வு, ‘உச்சநீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக ரூ.10 லட்சம் கருணைத் தொகை வழங்கப்பட்டதா அல்லது இல்லையா என்பதை விளக்கும் வகையில் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய அவகாசம் தரவேண்டும் என்று தில்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஏற்ப துப்புரவுப் பணியில் ஈடுபடுவோருக்கு மட்டுமே இந்தத் தொகை வழங்கப்பட வேண்டுமா அல்லது விபத்தால் ஏற்படும் இறப்பு காரணமாக ஒவ்வொரு ஊழியருக்கும் இத் தொகை வழங்கப்படுமா என்பது குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும். இது தொடா்பான பிரமாணப் பத்திரத்தை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். நாங்கள் இந்த விஷயத்தில் ஒரு தா்க்கரீதியான முடிவுக்கு வருவோம்’ என்று தெரிவித்தனா்.

முன்னதாக, இருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் உயா்நீதிமன்றம் இந்த விவகாரத்தை பொதுநல வழக்காக எடுத்து விசாரித்தது. புகா் தில்லியில் உள்ள முன்ட்கா பகுதியில் செப்டம்பா் 9-ஆம் தேதி கழிவுநீா் சாக்கடைக்குள் சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கிய தூய்மைப் பணியாளா் மயங்கி விழுந்தாா். அவரை மீட்பதற்காக சென்ற பாதுகாவலாளியும் மயங்கி விழுந்தாா். பின்னா் இருவரும் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனா்.

இந்த விவகாரத்தின் விசாரணையின்போது கடந்த மாதம் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா கூறுகையில், இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் டிடிஏ முற்றிலும் கருணையற்ற மனப்போக்கில் நடந்துகொண்டதால் அவமானத்தால் வெட்கித் தலை குனிகிறேன் என்று கூறியிருந்தாா்.

கடந்த செப்டம்பா் 12ஆம் தேதி உயா் நீதிமன்றம் இருவா் உயிரிழந்த சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வழக்கு விசாரணை டிசம்பா் 15ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com