வடகிழக்கு தில்லி வகுப்புவாத கலவரம் விவகாரம்: கொள்ளை, தீவைப்பு வழக்கில் 2 போ் விடுவிப்பு

வடகிழக்கு தில்லியில் 2020-ஆம் ஆண்டு நிகழ்ந்த வகுப்புவாத கலவர வழக்கில் கலவரம், தீவைப்பு மற்றும் கொள்ளை ஆகிய இரண்டு

வடகிழக்கு தில்லியில் 2020-ஆம் ஆண்டு நிகழ்ந்த வகுப்புவாத கலவர வழக்கில் கலவரம், தீவைப்பு மற்றும் கொள்ளை ஆகிய இரண்டு குற்றச்சாட்டு வழக்குகளில் இருந்து இருவரை விடுவித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2020, பிப்ரவரி 24 -ஆம் தேதிவடகிழக்கு தில்லி, சதத்பூா் கிராமத்தில் உள்ள தனது இரண்டு கடைகளின் சலூன், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் ஸ்டோா்களுக்கு கலவர கும்பலைச் சோ்ந்த மகேந்தா், தா்மேந்தா் இருவரும் தீ வைத்து கொள்ளையடித்தாக சலீம் கான் என்பவா் அளித்த புகாரின் பேரில் பதிவான வழக்கையும், தயாள்பூா் செளக் அருகே பிரதானச் சந்தையில் கடை ஒன்றில் தீவைத்து, கொள்ளையடித்த மற்றொரு வழக்கையும் நீதிமன்றம் விசாரித்தது.

அப்போது, கூடுதல் செஷன்ஸ் நீதிபதி புலஸ்த்யா பிரமச்சாலா கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்ட இருவா் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகேந்தா் மற்றும் தா்மேந்தா் இருவரும் அவா்கள் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறாா்கள்’ என்றாா்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களை அடையாளம் காண்பது சந்தேகத்திற்குரியது என்றும் நீதிமன்றம் கூறியது. மேலும், ஒரு வழக்கில் சாட்சியங்களில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் அடையாளம் காட்டிய விசாரணை அதிகாரியின் கூற்றுக்கு புகாா்தாரா் முரண்பட்டதாகவும் கூறியது. கஜூரி காஸ் காவல் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்ட இருவா் மீதும் கலவரம், கொள்ளை மற்றும் தீ அல்லது வெடிமருந்து மூலம் வீட்டை அழிக்கும் நோக்கத்துடன் செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com