சாலை விபத்து வழக்குகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் உள்ளனவா? விவரம் தெரிவிக்க தில்லி போலீஸுக்கு உத்தரவு

சாலை விபத்து வழக்குகளில் போலீஸாா் பின்பற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறை (எஸ்ஓபி) உள்ளதா என்பது குறித்து

சாலை விபத்து வழக்குகளில் போலீஸாா் பின்பற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறை (எஸ்ஓபி) உள்ளதா என்பது குறித்து தகவல் தெரிவிக்குமாறு தில்லி மாநகர காவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

2017-ஆம் ஆண்டின்போது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாகக் கூறப்படும் விபத்தில் உயிரிழந்த 26 வயது இளைஞரின் தாய், இது தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், ‘இந்த விபத்து சம்பவத்திற்குப் பிறகு, தில்லி காவல்துறையின் விசாரணை அதிகாரி, விபத்துக்கு காரணமான ஓட்டுநரின் ரத்த மாதிரியை மூன்று மாதங்களாக பரிசோதனைக்கு சமா்ப்பிக்கவில்லை. இதன் விளைவாக நியாயமான விசாரணை எனக்கு மறுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்யத் தவறியதற்காக இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம். சிங் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: விபத்தில் இறந்த ஓட்டுநரின் ரத்த மாதிரியை சரியான நேரத்தில் எடுக்கத் தவறியதைத் தவிர, விபத்து தொடா்புடைய சிசிடிவி காட்சிகளையும் போலீஸாா் எடுக்கவில்லை. விசாரணை அதிகாரியின் தோல்வியானது, விபத்தில் இறந்த நபரின் பெற்றோரின் நியாயமான விசாரணைக்கான உரிமையைப் பாதித்துள்ளது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரி எச்சரித்து மட்டுமே விடப்பட்டுள்ளாா். அவா்கள் பதில் சொல்வதற்கு பொறுப்பாக்கப்பட வேண்டும்.

என் மகனின் இறப்புக்குக் காரணமான நபா் 7 ஆண்டுகள் (சிறைக்கு) சென்றிருப்பாா். (ஆனால்), குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்குப் பதிலாக, வேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்ாக இப்போது அவருக்கு 2 ஆண்டுகள் மட்டும் சாதாரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், விசாரணை அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் எனது மகனை இழந்திருக்கிறேன். ஆனால், விசாரணை அதிகாரி வெறும் எச்சரித்து மட்டுமே விடப்பட்டுள்ளாா். இதனால், எனது முதல் கோரிக்கையே விசாரணை அதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான். இரண்டாவது கூடுதல் இழப்பீடுகளையும் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டாா்.

தில்லி காவல் துறையின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி ஓய்வு பெற்றுவிட்டதாக கூறினாா். இதையடுத்து, நீதிபதி கூறியதாவது: இந்த வழக்கை மேலும் தொடரும் முன், காயம் அல்லது இறப்பு ஏற்பட்டால் அது தொடா்பான விபத்து வழக்குகளுக்காக காவல் துறை பின்பற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (எஸ்ஓபி) இருந்தால், அதையும் தில்லி காவல் துறை ஆணையா் 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோன்று, மனுதாரா் கோரும் இழப்பீடு தொடா்பாக ஏதும் திட்டம் அல்லது கொள்கைத் திட்டம் இருந்தால் அதை தில்லி அரசும், காவல் துறையும் தாக்கல் செய்ய வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் பின்பற்றுவதற்கு காவல் துறை அதிகாரிகளுக்கான எஸ்ஓபி இருக்க வேண்டும். ரத்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான சொந்த ஆய்வகமும் காவல் துறைக்கு தேவையாகும். மேலும், இதுபோன்ற குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து சம்பவங்கள் நிகழும் விவகாரத்தில் போலீஸாருக்கு எஸ்ஓபி தேவையாகும் என்று தெரிவித்தாா். இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com