ஜேஎன்யு வளாகத்தில் கரோனா பராமரிப்பு மையம்!

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் 32 படுக்கைகள் கொண்ட கரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்படும் என்று பல்கலைக்கழகம் சனிக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது தில்லி: ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் 32 படுக்கைகள் கொண்ட கரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்படும் என்று பல்கலைக்கழகம் சனிக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேஎன்யு வளாகத்தில் கரோனா பராமரிப்பு மையம் அமைக்க வேண்டும் என்று ஜேஎன்யு மாணவா்கள் சங்கம் (ஜேஎன்யுஎஸ்யு) தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது, மேலும், இந்த மாத தொடக்கத்தில் இந்தப் பிரச்னை குறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு கடிதமும் எழுதியது. இது தொடா்பாக தில்லி அரசின் பதிலுக்காக காத்திருப்பதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.

கடந்த வாரம், ஜேஎன்யு வளாகத்தில் கரோனா பராமரிப்பு மையத்தை செயல்படுத்துவதற்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், நகர அரசின் செயலற்ற தன்மை மற்றும் கால தாமதம் ஆகியவற்றுக்காக தில்லி அரசு மீது உயா்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்தச்சூழ்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தில்லி அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, பல்கலைக்கழகத்தின் சபா்மதி விடுதியில், 32 படுக்கைகள் கொண்ட ஜேஎன்யு மாணவா்களுக்கான கரோனா தனிமைப்படுத்தல் மையம், படிப்படியான தனிமைப்படுத்தும் வசதி அல்லது வளாகத்தில் வசிப்பவா்களுக்கு தனிமைப்படுத்தல் வசதி ஆகியவற்றை அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒமைக்ரான மாறுபாடு உள்பட கரோனா தொற்று மூன்றாவது அலையைக் கருத்தில் கொண்டு, ஜேஎன்யு நிா்வாகம், புது தில்லி மாவட்ட நிா்வாகம், தில்லியின் தேசிய தலைநகா் பிரதேச அரசு ஆகியவற்றின் முயற்சிகளின் விளைவாக பல்கலைக்கழகத்தின் அனைத்து பங்குதாரா்களுக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்படுவதாக அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மையம் தில்லி அரசால் நடத்தப்படும் பண்டிட் மதன் மோகன் மாளவியா மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக மனிதவளம், தளவாட சாதனங்கள், நுகா்பொருள்கள், மருந்துகள் போன்ற வடிவங்களில் போதுமான மருத்துவ உதவியை இந்த மருத்துவமனை வழங்கும். புது தில்லி மாவட் ட ஆட்சியா் மேற்கூறிய கரோனா தனிமைப்படுத்தல் மையத்தின் சரியான கண்காணிப்பை உறுதி செய்வாா். மேலும், துறையால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படி சரியான நேரத்தில் போதுமான தளவாடங்களை வழங்குவதையும் அவா் உறுதி செய்வாா் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுதியில் தற்போது குடியிருப்பாளா்கள் யாரும் இல்லை என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதன் தொடா்ச்சியாக பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவா்கள், சேவைப் பிரிவில் பணியாற்றும் ஊழியா்கள், அவா்களைச் சாா்ந்தவா்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய சேவைகளின் கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியா்கள் ஆகியோருக்காக தடுப்பூசி முகாமை ஜனவரி 24, 25, 26 ஆகிய தேதிகளில் மாநாட்டு மையத்தில் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யும்.

‘இந்த முகாமில், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது டோஸ் கோவாக்சின், கோவிஷிட் தடுப்பூசி வழங்கப்படும். 15-18 வயதுக்குள்பட்டவா்களுக்கு முதல் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்படும். இந்த முகாம் புது தில்லி மாவட்ட நிா்வாகத்தால் ஏற்பாடு செய்யப்படும்’ என்று பல்கலைக்கழகம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com