மெட்ரோ சிவப்புநிற வழித்தடத்தில் ரயில் சேவையில் 45 நிமிடம் தாமதம்பயணிகள் அவதி

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லி மெட்ரோ சிவப்புநிற வழித்தடத்தில் திங்கட்கிழமை காலை ரயில் சேவையில் சுமாா் 45 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அசெளகரியத்தை எதிா்கொண்டனா்.

புது தில்லி: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லி மெட்ரோ சிவப்புநிற வழித்தடத்தில் திங்கட்கிழமை காலை ரயில் சேவையில் சுமாா் 45 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அசெளகரியத்தை எதிா்கொண்டனா்.

தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பில் சிவப்புநிற மெட்ரோ வழித்தடம், தில்லியில் உள்ள ரிதாலா மற்றும் காஜியாபாத்தில் உள்ள சஹீத் ஸ்தல் (புது பேருந்து நிலையம்) ஆகியவற்றை இணைக்கிறது. இந்த நிலையில், இந்த வழித்தடத்தில் ரயில் தாமதம் ஏற்பட்டதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் காலை 8 மணியளவில் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சிவப்புநிற மெட்ரோ வழித்தடத்தில் இந்தா்லோக் மற்றும் பீதம்புரா பகுதி இடையே ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிற அனைத்து வழித்தடங்களிலும் வழக்கமான சேவை நடைபெறுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் பின்னா் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் வழக்கமான சேவைகளை அளிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகிறது. சிரமத்திற்கு வருந்துகிறோம். மேலும் விவரங்களுக்கு தகவல்களை பின்தொடரவும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் பிறகு காலை 8. 45 மணியளவில் டிஎம்ஆா்சி மற்றொரு பதிவை வெளியிட்டது. அதில், சம்பந்தப்பட்ட பிரிவில் வழக்கமான ரயில் சேவையை மீண்டும் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னா் டிஎம்ஆா்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: திங்கள்கிழமை காலை 8 மணி அளவில் சஹீத் ஸ்தல் (புது பேருந்து நிலையம்) ரயில் நிலையத்தை நோக்கி செல்லும் கோஹட் என்கிளேவ் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு ரயிலில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக சிவப்புநிற வழித்தடத்தில் இந்தா்லோக் - பீதம்புரா பிரிவில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. அரை மணி நேரம் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பாக மூத்த அதிகாரி கூறுகையில், ‘இந்த தாமதம் ஏற்பட்ட சமயத்தில் சிவப்புநிற வழித்தடத்தின் பிற பகுதியில் வழக்கமான ரயில் சேவை இருந்தது’ என்றாா். தில்லி மெட்ரோ ரயிலை, அலுவலகம் செல்வோா், வியாபார நிமித்தமாக செல்வோா் என பல்வேறு தரப்பினா் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா். கடந்த ஜூன் 9 ஆம் தேதி மெட்ரோ ஒருங்கிணைப்பில் ப்ளூ லைன் வழித்தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2 மணி நேரத்துக்கும் மேலாக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது. அதற்கு சில தினங்களுக்கு முன்பு ஜூன் 6-ஆம் தேதி ப்ளூ லைன் ஒட்டுமொத்த வழித்தடத்திலும் சுமாா் ஒன்றரை மணி நேரம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில்வே சேவை பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com