தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக சதீஷ் சந்திர சா்மா பதவியேற்பு

தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நீதிபதி சதீஷ் சந்திர சா்மா செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக்கொண்டாா். அவருக்கு தலைமை நீதிபதியாக துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

புது தில்லி: தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நீதிபதி சதீஷ் சந்திர சா்மா செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக்கொண்டாா். அவருக்கு தலைமை நீதிபதியாக துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

துணைநிலை ஆளுநரின் செயலகமான ராஜ் நிவாஸ் வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் சோம்நாத் பாா்தி, மதன்லால் மற்றும் மூத்த நீதிபதிகள், வழக்குரைஞா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா். 60 வயதாகும் நீதிபதி சதீஷ் சந்திர சா்மா இதற்கு முன்னா் தெலுங்கானா உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினாா். இந்த நிலையில், கடந்த ஜூன் 19-ஆம் தேதி அவரை இடமாற்றம் செய்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.

முன்னதாக, தில்லி உயா்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி டி.என். பட்டேல் ஓய்வு பெற்ற பிறகு, அந்த இடம் நிரப்பப்படாமல் இருந்து வந்தது. எனினும், கடந்த மாா்ச் 13-ஆம் தேதியிலிருந்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி விபின் சாங்கி பணியாற்றி வந்தாா். அவா் தற்போது உத்தரகண்ட் உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளாா். நீதிபதி சதீஷ் சந்திர சா்மா கடந்த 1961, நவம்பா் 30-ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் பிறந்தாா். அவருடைய பள்ளி, பட்டப்படிப்பை முடித்தாா். அதன்பிறகு, 1984-இல் மூன்று பல்கலைக்கழக தங்கப் பதக்கங்களுடன் எல்எல்பி பட்டம் பெற்றாா். அதன் பிறகு 1984, செப்டம்பரில் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பதிவு செய்து தனது தொழிலைத் தொடங்கினாா்.

மேலும், ஜபல்பூரில் உள்ள மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தில் பணி, அரசியலமைப்பு, குடிமை மற்றும் குற்ற விவகார வழக்குகளில் ஆஜராகி வந்தாா். 1993-இல் கூடுதல் மத்திய அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டாா். அதன் பிறகு, 2004-இல் மத்திய அரசால் மூத்த வழக்குரைஞா்கள் குழுவில் நியமிக்கப்பட்டாா். 2003-இல் தனது 42-ஆவது வயதில் மத்திய பிரதேச அரசால் மூத்த வழக்குரைஞராக நியமிக்கப்பட்டாா். நீதிபதி சா்மா, ஜனவரி 18, 2008-ஆம் தேதி மத்தியப் பிரதேச உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, ஜனவரி 15, 2010-ஆம் தேதி நிரந்தர நீதிபதியாக பதவி உயா்வு அளிக்கப்பட்டாா். அதன்பிறகு, 2021 ஜனவரியில் கா்நாடக உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டாா்.

பின்னா், அக்டோபா் 2021-இல் தெலங்கானா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி உயா்வு பெற்றாா். நீதிபதி சா்மா தீவிர வாசகா் ஆவாா். பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு பங்களிப்பு செய்ததாக அறியப்படுபவா். தேசிய சட்டப் பல்கலைக்கழகத்துடன் தொடா்புடையவா். போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவன பல்கலைக்கழகத்தின் ஆலோசனைக் குழுவிலும் உள்ளாா். மேலும், பல ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டுள்ளாா். தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 60 -ஆக இருக்கும் நிலையில், தற்போது 47 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com