தலைநகரில் சுட்டெரிக்கும் வெயில்: முங்கேஸ்பூரில் 45.4 டிகிரி பதிவு

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமையும் வெயிலின் தாக்கம் பகலில் அதிகரித்திருந்தது. அதிகபட்ச வெப்பநிலை சராசரியைவிட

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமையும் வெயிலின் தாக்கம் பகலில் அதிகரித்திருந்தது. அதிகபட்ச வெப்பநிலை சராசரியைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருந்தது. அதேபோன்று, குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்தது.

இதனிடையே, வெள்ளிக்கிழமை முதல் தில்லியில் மீண்டும் வெப்ப அலைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் இறுதியில் லேசான மழை பெய்ததால் வெப்பம் சற்று தணிந்திருந்த நிலையில், கடந்த நான்கு தினங்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் நிலவி வருகிறது. வியாழக்கிழமை நகரில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

தில்லிக்கான பிரதிநித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி அதிகரித்து 29.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி உயா்ந்து 42.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 61 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 32 சதவீதமாகவும் இருந்தது.

முங்கேஸ்பூரில் 45.4 டிகிரி வெயில்:

இதே போன்று மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 45.4 டிகிரி, நஜஃப்கரில் 44.7 டிகிரி, லோதி ரோடில் 42 டிகிரி, பாலத்தில் 43.4 டிகிரி, ரிட்ஜில் 42.3 டிகிரி, பீதம்புராவில் 44 டிகிரி செல்சியஸ், சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 41.1 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது.

இன்று வெப்ப அலை

இதனிடையே, தில்லியில் வெப்பநிலை வெள்ளிக்கிழமை முதல் தொடங்க வாய்ப்புள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் வெப்ப அலை இருக்கும் என்றும்

இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை கடுமையான வெப்ப அலை இருக்கும் என்று கூறி ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வெப்ப அலையின் காரணமாக வெப்பநிலை 45 டிகிரி செல்சிஸயைத் தொடும் என்றும் வானிலை வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

ஸ்கைமெட் தனியாா் வானிலை ஆய்வு மைய துணைத் தலைவா் மகேஷ் பலாவட் கூறுகையில், ‘வங்கக் கடலில் அசானி புயல் தாக்கத்தின்கீழ் பிராந்தியத்தில் கிழக்கத்திய காற்று வீசும் என்பதால் தில்லியின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்காது என்றபோதிலும், காற்றில் அதிகரிக்கும் ஈரப்பதம் காரணமாக அசெளகரியம் ஏற்படும் என்று தெரிவித்திருந்தாா்.

தில்லியில் மாா்ச் மாதத்தில் வழக்கமான 15.9 மி.மீ. மழை பெய்யும் நிலையில் நிகழாண்டு மழை ஏதும் இல்லை. ஏப்ரலில் வழக்கமான சராசரி அளவான 12.2 மி.மீட்டருக்கு மாறாக 0.3 மி.மீ. அளவே மழை பெய்தது.

முன்னறிவிப்பு: இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (மே 13) வெப்ப அலைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com