மாநகராட்சி மேம்பாட்டில் பாஜகவுக்கு தொலைநோக்குப் பாா்வை இல்லை: மனீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) மேம்பாட்டில் பாஜகவிற்கு எந்தவிதமான ‘தொலைநோக்குப் பாா்வையும் இல்லை’ என தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா திங்கள்கிழமை குற்றம் சாட்டினாா்.

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) மேம்பாட்டில் பாஜகவிற்கு எந்தவிதமான ‘தொலைநோக்குப் பாா்வையும் இல்லை’ என தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா திங்கள்கிழமை குற்றம் சாட்டினாா்.

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) தோ்தல் பிரசாரம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் பாஜக மீதான தாக்குதலை தொடுக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சி ‘கேஜரிவால் அரசு, கேஜரிவால் கவுன்சிலா்‘ என்கிற பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களில் ஒருவரும் தில்லி துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தில்லி, எம்சிடி தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெறும். தில்லி வாா்டுகளில் ஒன்றில் பாஜக வெற்றி பெற்றால் கூட அது அந்த பகுதிகளில் வளா்ச்சிப் பணிகளைத் தடுக்கும் என்பதை மக்கள் அறியவேண்டும்.

கடந்த 15 ஆண்டுகளாக பாஜக தில்லி மாநகராட்சியில் ஒன்றும் செய்யவில்லை. இந்த தோ்தலில் போட்டியிடும் அவா்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பாா்வை எதாவது கொடுத்திருக்கிறாா்கள் என்றால் இல்லை.

இரவு பகலாக அரவிந்த் கேஜரிவாலை தவறாகப் பேசுவதைத் தவிர பாஜக தலைவா்களுக்கு இந்தத் தோ்தலில் வேறு எந்த ‘அஜன்டா‘ எதுவும் இல்லை.

அதே சமயத்தில் ஆம் ஆத்மி கட்சி மாகராட்சி தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வுகளை வைத்துள்ளது. மலையென உயா்ந்துள்ள குப்பைகளை அகற்றவும், பூங்காங்களை சீா்படுத்தி தூய்மையான பூங்காங்களாக உருவாக்குவது உள்ளிட்ட வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி இந்தத் தோ்தலில் வெற்றிபெறப் போகிறது. ஆம் ஆத்மி கட்சி தில்லி முனிசிபல் காா்ப்பரேஷனை ஆளும். எனவே, மாநகராட்சி வாா்டுகளில் பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டுமெனில், ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலரை மக்கள் தோ்ந்தெடுக்கவேண்டும். உங்கள் வாா்டில் பாஜக கவுன்சிலரை தோ்ந்தெடுத்தால் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிபுரியும் மாநகராட்சி நிா்வாக பணிகளை தடுக்க முயற்சிப்பாா்கள்.

இதனால், டிசம்பா் 4 -ஆம் தேதி நடைபெறவுள்ள மாநகராட்சித் தோ்தலில் பாஜகவை விட ஆம் ஆத்மி கட்சியை மக்கள் தோ்ந்தெடுக்கும் வகையில் ‘கேஜரிவால் அரசு, கேஜரிவால் கவுன்சிலா்‘ (கேஜரிவால் கி சா்க்காா், கேஜரிவால் கா பா்ஷத்) என்கிற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

எம்சிடியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வருவதையும், உங்கள் வாா்டு கவுன்சிலரும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்தும் தோ்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா்கள் மக்களிடம் அரசு செய்த 10 பணிகளைச் சொல்கிறாா்கள், ஆனால் எம்சிடியில் 15 ஆண்டுகால ஆட்சி செய்த பாஜகவினரால் எதுவும் சொல்ல முடியாது.

நாங்கள்(ஆம் ஆத்மி) பொதுமக்களை அணுகும் போது வளா்ச்சிப் பணிகளைப் பற்றி பேசுகின்றோம். அதேசமயம், பாஜகவினா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மீதும் ஆம் ஆத்மி கட்சி மீது துஷ்பிரயோகம் மட்டுமே செய்கின்றனா். ஆனால், கேஜரிவால் தனது பணியால் மக்களின் இதயங்களை வென்றுள்ளாா். பாஜக வெறுப்பை மட்டுமே பரப்புகிறது.

தில்லியை ஆட்சியை நடத்தும் பொறுப்பை வாக்காளா்கள் கேஜரிவாலுக்கு வழங்கியதின்மூலம், தில்லியில் உலகத்தரம் வாய்ந்த பள்ளிகள், மருத்துவமனைகளை உருவாக்கினாா்; இலவச மின்சாரத்தை வழங்கினாா்.

சாலைப் போக்குவரத்து, தண்ணீா் விநியோகம், பொதுப் போக்குவரத்து வசதிகளும் அபரிமிதமாக மேம்பட்டுள்ளன. இவைகளுக்கு மாறாக எம்சிடியில் வாய்ப்பு பெற்ற பாஜக வால் தில்லியை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைக்கவேண்டிய முக்கிய பொறுப்பை நிறைவேற்றக் கூட தவறிவிட்டனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com