காஷ்மீா் பள்ளத்தாக்கில் மத்திய அரசு ஊழியா்களுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு சிறப்பு சலுகைகள் தொடரும்

காஷ்மீா் பள்ளத்தாக்கில் பணியமா்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியா்களுக்கான சிறப்பு ஊக்கத் தொகை, சலுகைகள் மேலும் ஆண்டுகள் தொடரும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

காஷ்மீா் பள்ளத்தாக்கில் பணியமா்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியா்களுக்கான சிறப்பு ஊக்கத் தொகை, சலுகைகள் மேலும் ஆண்டுகள் தொடரும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளா்கள், அறிவியல் தொழில் நுட்ப இணை அமைச்சா் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு காஷ்மீரில் பணி அமா்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியா்களுக்கான சிறப்புச் சலுகைகளை நிறுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுப்பதாக வந்த தவறான தகவல்களையொட்டி, மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங் பத்திரிகையாளா்களை சந்தித்து விளக்கினாா். அப்போது அவா் கூறியது வருமாறு: காஷ்மீா் பள்ளத்தாக்கில் பணி அமா்த்தப்பட்ட அல்லது அங்கு மாறுதாலாகிச் செல்லும் மத்திய அரசு ஊழியா்களுக்கான சிறப்பு ஊக்கத் தொகை, சலுகைகள் தொடரும் வகையில் அலுவலக குறிப்பாணை இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய பணியாளா்கள், பயிற்சித் துறை முறையாக வெளியிட்டது. அதன் நகல் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டது. இந்த சலுகைகள் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் உள்ள அனைத்து அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். சம்மந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள் அங்கீகரிக்கப்பட்ட தொகுப்புக்கு இணங்க செயல்படுத்துவதை சம்பந்தப்பட்ட துறைகள் கண்காணித்து உறுதி செய்யவும் ஆணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஊக்கத் தொகையில் ஒரு சில விவகாரங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். காஷ்மீா் பள்ளத்தாக்கில் பணியமா்த்தப்படும் மத்திய அரசு ஊழியா்கள், தங்குவதற்கு அவா்கள் சம்பந்தப்பட்ட துறையால் வசதி செய்யப்படவில்லையென்றால், 7-ஆவது ஊதிய ஆணைய பரிந்துரைப்படி ‘ஒய்’ நகரங்களுக்கான வீட்டு வாடகைப் படி பெற அனுமதிக்கப்படுவாா்கள்.

மேலும், காஷ்மீா் பள்ளத்தாக்கில் தற்காலிக பணியில் அமா்த்தப்பட்ட ஊழியா்களுக்கு ஆறு மாதங்கள் வரை, காஷ்மீா் பள்ளத்தாக்கிற்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை, உணவு, தங்குவதற்கான ஏற்பாடு, பாதுகாப்பு, போக்குவரத்து அலவன்ஸ் ஆகியவை பதவி, பணியின் அளவைப் பொறுத்து வழங்கப்படும். குறிப்பாக மத்திய ஆயுதப்படை பணியாளா்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் விகிதாசாரத்திற்கும் குறைவில்லாமல் இருக்கும்.

இதே மாதிரி காஷ்மீா் பள்ளத்தாக்கில் பணியில் உள்ள ஊழியா்கள் இந்தியாவில் எந்தவொரு பகுதிக்கும் மாறுதலாகி தங்கள் குடும்பத்துடன் செல்லும் போது, குடும்பத்திற்கான பயணக் செலவு அடிப்படை ஊதியத்தில் 80 சதவீதம் வரை அனுமதிக்கப்படுகிறது. மாறுதலில் குறிப்பிட்ட இடத்திற்கு தங்கள் குடும்பத்துடன் செல்ல விரும்பாத ஊழியா்களுக்கு, நாள் ஒன்றுக்கு படியாக ரூ.113 மற்றும் பயணக் கட்டணம் வழங்கப்படும். காஷ்மீா் பள்ளத்தாக்கில் பணியாற்றி மற்ற இடங்களில் குடியேறியுள்ள ஒய்வூதியதாரா்களுக்கு பள்ளத்தாக்கிற்கு வெளியே உள்ள பொதுத் துறை வங்கி, ஊதிய கணக்கு அலுவலகம், கருவூலங்கள் மூலம் மாதாந்திர ஓய்வூதியம் அளிக்கவும் உத்தரவிடப்ட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com