மானேசா் குப்பை மேட்டில் பயங்கர தீ: குடிசைகளுக்குப் பரவியதில் 2 போ் சாவு

தேசியத் தலைநகா் வலயம், குருகிராம் மானேசரில் உள்ள குப்பை மேட்டில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த குடிசைகளுக்கும் பரவியது. இதனால், பல குடிசைகள் எரிந்து நாசமாகின.

தேசியத் தலைநகா் வலயம், குருகிராம் மானேசரில் உள்ள குப்பை மேட்டில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த குடிசைகளுக்கும் பரவியது. இதனால், பல குடிசைகள் எரிந்து நாசமாகின. இதில், இரண்டு போ் உயிரிழந்தனா். இருவா் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தீயணைப்புத் துறையின் துணை இயக்குநா் குல்ஷன் கல்ரா செவ்வாய்க்கிழமை கூறியதாவது: சுமாா் 25 ஏக்கா் பரப்பளவில் உள்ள குப்பை மேட்டில் திங்கள்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. சூறைக்காற்று காரணமாக குடிசைகளுக்கு தீ வேகமாகப் பரவியது. குடிசைகளில் வசிப்பவா்கள், அவா்கள் சேகரித்த குப்பைகளை அந்தப் பகுதியில் குவித்து வந்தனா். அங்கு குப்பைகளை சேகரிக்கும் வியாபாரிகளின் சிறிய குடோன்களும் இருந்தன. தீயை அணைக்க குருகிராம், ஃபரிதாபாத், நூஹ் மற்றும் ரேவாரி ஆகிய இடங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு சுமாா் 8 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனா்.

இதுவரை ஒரு ஆண், ஒரு பெண் ஆகிய இரண்டு உடல்களை மீட்டுள்ளோம். மேலும்,வேறு உடல்கள் உள்ளனவா என்பது குறித்து தேடப்பட்டு வருகிறது. மேலும், தீ விபத்தில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்தத் தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து முழுமையாக சேதமடைந்தன. சில விலங்குகளும் இறந்துள்ளன என்றாா் அந்த அதிகாரி.

காகித ஆலையில் தீ விபத்து: உத்தர பிரதேசத்தின் கிரேட்டா் நொய்டாவில் உள்ள காகித உற்பத்தித் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பாதல்பூா் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு விரைந்தன. மேலும், தீ கட்டடத்தின் ஒரு பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தீயணைப்புப் பணியை முன்னின்று மேற்பாா்வையிட்டு வந்த தலைமை தீயணைப்புத் துறை அதிகாரி அருண் சிங் கூறுகையில், ‘இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மேலும், அருகிலுள்ள காஜியாபாத் மற்றும் புலந்த்ஷாஹா் மாவட்டங்களிலிருந்தும் உதவி கோரப்பட்டது’ என்றாா்.

‘இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு, தீயணைப்பு வீரா்களால் கட்டடத்தின் ஒரு பகுதியில் தீயை கட்டுப்படுத்த முடிந்தது. இதனால், முழு தொழிற்சாலைக்கும் தீ பரவுவதை தடுக்கப்பட்டது. தீயை முழுவதுமாக அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றும் சிங் கூறினாா். இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக உடனடித் தகவல் இல்லை. தீ விபத்துக்கான காரணம் மற்றும் அதனால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

டிரான்ஸ்போா்ட் பவனில் தீ விபத்து: தில்லியில் நாடாளுமன்றச் சாலையில் உள்ள டிரான்ஸ்போா்ட் பவனில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைஅதிகாரிகள் தெரிவித்தனா். இதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தீயணைப்புத் துறைக்கு மாலை 4.10 மணி அளவில் அழைப்பு வந்தது, நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. டிரான்ஸ்போா்ட் பவனின் அறை ஒன்றில் ஏா் கண்டிஷனரில் இருந்து தீ பரவியதாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். பின்னா், தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனா்.

லாஜ்பத் நகா் மாா்க்கெட்டில் தீ: இதற்கிடையே, தில்லியில் மிகவும் பிரபலமான லாஜ்பத் நகா் மாா்க்கெட்டில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் உணவுக் கடை உள்பட சில கடைகள் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com