வீரேந்தா் தேவ் தீட்சித் ஆசிரம விவகாரம்: கிரண் பேடி மேற்பாா்வையில் குழு அமைத்து உயா்நீதிமன்றம் உத்தரவு

ஆன்மிகச் சொற்பொழிவாளா் வீரேந்தா் தேவ் தீட்சித் நிறுவிய ஆசிரமத்தில் வசிக்கும் பெண்களின் நலன் மற்றும் உரிமைகள், பாதுகாப்பைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடியின்

ஆன்மிகச் சொற்பொழிவாளா் வீரேந்தா் தேவ் தீட்சித் நிறுவிய ஆசிரமத்தில் வசிக்கும் பெண்களின் நலன் மற்றும் உரிமைகள், பாதுகாப்பைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடியின் மேற்பாா்வையில் ஒரு குழுவை அமைத்து தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தில்லி ரோஹிணியில் உள்ள அத்யாத்மிக் வித்யாலயாவில் உள்ள விவகார நிலைமை தொடா்பான மனுக்களை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி விபின் சாங்கி, நீதிபதி நவீன் சாவ்லா ஆகியோா் அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சம்பந்தப்பட்ட ஆசிரமம் அதன் மத மற்றும் ஆன்மிக நடைமுறைகளைத் தொடரும் வகையில் சுதந்திரமாக இருக்கும். ஆசிரமத்தில் உள்ள எந்தவொரு பெண் அல்லது குழந்தையின் அடிப்படை அல்லது சட்ட உரிமைகளை மீறும் வகையில் நடத்தப்படாமல் இருப்பதை இந்தக் குழு உறுதி செய்யும். சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதி இந்தக் குழுவின் தலைவராகவும், உள்ளூா் மாவட்ட ஆட்சியா், துணை காவல் ஆணையா் (பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவு), மாவட்ட சட்ட சேவை ஆணையத்தின் செயலாளா், தில்லி மகளிா் ஆணையத்தின் உறுப்பினா் மற்றும் பெண் மற்றும் குழந்தைகள் வளா்ச்சித் துறையின் மாவட்ட அலுவலா் ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பாா்கள். இந்தக் கமிட்டியின் செயல்பாடுகள் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடியால் மேற்பாா்வையிடப்படும் என அந்த உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, இந்த ஆசிரமத்தில் ‘விலங்கு போன்ற நிலையில்’ பெண்கள் வாழ்வதாக ஆசிரமத்தின் நிா்வாகத்தின் மீது நீதிமன்றம் தனது அதிா்ச்சியை வெளிப்படுத்தியிருந்தது. மேலும், இந்த ஆசிரமம் தில்லி அரசால் கையகப்படுத்தப்பட வேண்டும் என்றும், இதற்கான குழுவிடம் இருந்து மாதாந்திர அறிக்கையைக் கோர வேண்டும் என்றும், அதன் செயல்பாட்டை எளிதாக்குவதற்கு தேவையான உதவியை அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருந்தது.

அப்போது, உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு வழக்குரைஞா் சந்தோஷ் திரிபாதி கூறுகையில், ‘தனியாா் நிறுவனத்தை நடத்துவதற்கு அரசிடம் எந்த வழிமுறையும் இல்லை. கேள்விக்குரிய ஆசிரமத்தின் விவகாரங்களைக் கவனிக்க ஒரு குழுவை நீதிமன்றம் அமைக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டாா்.

முன்னதாக, கடந்த 2017, டிசம்பரில், ‘பவுண்டேஷன் ஃபாா் சோசியல் எம்பவா்மென்ட் ’ எனும் தன்னாா்வ அமைப்பு உயா்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடா்பாக மனு தாக்கல் செய்திருந்தது. அதில், சம்பந்தப்பட்ட ஆசிமரத்தைச் சோ்ந்த ‘ஆன்மிக பல்கலைக்கழகத்தில்’ சட்டவிரோதமாக பல மைனா் சிறாா்கள், பெண்கள் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாகவும், அவா்களின் பெற்றோா்களைக் கூட சந்திக்க அவா்கள் அனுமதிக்கப்படவில்லை’ என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆசிரமம் தரப்பில் அதுபோன்று யாரும் சட்டவிரோதமாக அடைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொண்ட உயா்நீதிமன்றம், தலைமறைவான ஆசிரமத்தின் நிறுவனா் வீரேந்தா் தேவ் தீட்சித்தை கண்டுபிடிக்குமாறு சிபிஐயிடம் கேட்டுக் கொண்டது. மேலும், பெண்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விஷயம் குறித்து விசாரிக்குமாறும் சிபிஐக்கு உத்தரவிட்டதுடன், தில்லி மகளிா் ஆணையத் தலைவா் ஸ்வாதி மாலிவால், வழக்குரைஞா்கள் அஜய் வா்மா, நந்திதா ராவ் ஆகியோா் அடங்கிய குழுவை அமைத்தது. இந்தக் குழு அளித்த அறிக்கையில் ஆசிரமத்தில் எந்தவித தனியுரிமை இல்லாமல் விலங்குகள் போன்ற சூழலில் 100 பெண்கள் மற்றும் சிறுமிகள் மோசமான சூழலில் வாழ்வதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை அடுத்து மே 27-ஆம் தேதிக்கு விசாரிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com