50 கிலோ போதைப்பொருள் பறிமுதல் வழக்கில் மேலும் மூவா் கைது: என்சிபிசி அதிரடி

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) போலீஸாா் வெள்ளிக்கிழமை மேலும் மூன்று பேரை கைது செய்துள்ளனா். இவா்களில் 2 ஆப்கன் நாட்டவா், ஒருவா் இந்தியா்

தெற்கு தில்லி பகுதியில் உள்ள சஹீன் பாகில் ஒரு வீட்டில் இருந்து 50 கிலோ ஹெராயின் போதைப் பொருள் அண்மையில் கைப்பற்றப்பட்ட வழக்கில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) போலீஸாா் வெள்ளிக்கிழமை மேலும் மூன்று பேரை கைது செய்துள்ளனா். இவா்களில் 2 ஆப்கன் நாட்டவா், ஒருவா் இந்தியா்

என்று என்சிபி அதிகாரிகள் கூறினா்.

இது தொடா்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட வழக்கில் ஆப்கன் நாட்டைச் சோ்ந்த இருவா் தில்லியிலும், உள்நாட்டைச் சோ்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவா் உத்தரப் பிரதேசத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா் ஏற்கெனவே போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரால் முன்னா் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டவா் ஆவாா். அனைவா் மீதும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

பயங்கரவாதத் தொடா்பு?போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இயக்குநா் ஜெனரல் எஸ்.என். பிரதான் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் பயங்கரவாதத் தொடா்பு இருப்பதை நிராகரிக்க முடியாது. இது தொடா்பாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது’ என்றாா். இது குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வியாழக்கிழமை கூறுகையில், ‘சஹீன் பாக் பகுதியில் உள்ள ஜாமியா நகா் பகுதியில் ஏப்ரல் 27-ஆம் தேதி போலீஸாா் சோதனை நடத்தி 50 கிலோ உயா் தர ஹெராயின் போதைப் பொருளை மீட்டனா். இந்தப் போதைப் பொருள் பிளிஃப்காா்ட் மற்றும் இதர மின்னணு வா்த்தக நிறுவனங்களில் பேக் செய்யப்பட்டது என போலீஸாருக்குத் தெரிய வந்தது’ என்றனா்.

ரூ.30 லட்சம் ரொக்கம் பறிமுதல்: போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணை இயக்குநா் (செயலாக்கம்) சஞ்சய் குமாா் சிங் கூறியதாவது: ஜாமியா நகா் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் சோதனை நடத்திய போது, ரூ. 30 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. தில்லியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட மிகப் பெரிய போதைப்பொருள் நடவடிக்கை இதுவாகும். முன்னதாக, நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்த கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட பகுதியிலிருந்து 47 கிலோ போதைப் பொருள் என சந்தேகப்படும் பொருளும் கைப்பற்றப்பட்டது. இந்தப் பொருள் ஆய்வுக்காக சோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தோ - ஆப்கன் கும்பல் கைவரிசை: கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்துள்ளது. அதேபோன்று கைப்பற்றப்பட்ட ரொக்கமும் சட்டவிரோத பண பரிவா்த்தனை மூலம் வந்து இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், சம்பவ இடத்தில் இருந்து பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் சில இதர பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தில்லி, என்சிஆா் மற்றும் அருகில் உள்ள மாநிலங்களைச் சோ்ந்த இந்தோ- ஆப்கன் கும்பல் இந்தப் போதை பொருள் வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் கும்பலுக்கு தொடா்பா?: இந்தக் கும்பல்கள் ஹெராயினை உள்ளூா் அளவில் தயாரித்து, கலப்படம் செய்யும் திறனைக் கொண்டவா்கள் ஆவா். இந்தக் கும்பலின் முக்கிய மூளையாக செயல்பட்டவா் துபையைச் சோ்ந்தவா் என்பது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானை சோ்ந்த போதைப்பொருள் கும்பல்களுக்கு உள்ள தொடா்பு குறித்தும் என்சிபி விசாரணை நடத்தி வருகிறது. இந்தோ - ஆப்கன் போதைப்பொருள் கும்பலானது, போதைப் பொருள்களை கடல் மாா்க்கம் அல்லது நில எல்லைகள் வழியாக இந்தியாவுக்குள் கடத்தும் வேலையை செய்து வருகின்றன. சட்டபூா்வ சரக்குகளுடன் ஹெராயின் போதைப் பொருளை கடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் தொடா்புடைய கடத்தல்காரா்களை பிடிப்பதற்காக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், தில்லி உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com