தில்லியில் பல இடங்களில் பரவலாக மழை! பாலத்தில் 29 மி.மீட்டராக பதிவு

தேசியத் தலைநகரின் பல பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது, இந்த மழை, வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலையிலிருந்து சிறிது நிவராணத்தை அளித்தது
தில்லியில் பல இடங்களில் பரவலாக மழை! பாலத்தில் 29 மி.மீட்டராக பதிவு

தேசியத் தலைநகரின் பல பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது, இந்த மழை, வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலையிலிருந்து சிறிது நிவராணத்தை அளித்தது, அதே நேரத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்தியா கேட், சன்சாத் மாா்க், ஐடிஓ, பாலம், ஷாதரா, தில்ஷாத் காா்டன், ஆயாநகா், தேரமண்டி, பீதம்புரா, நஜஃப்கா் லுட்யென்ஸ் தில்லி உள்ளிட்ட பல இடங்கள் மழை பெய்துள்ளது. தில்லியில் புதன்கிழமை காலை 8.30 மணி முதல் வியாழக்கிழமை 8.30 மணி வரையிலும் 24 மணிநேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு மேல் பாலத்தில் 29 மி.மீ., ஆயாநகரில் 23.6 மி.மீ., பீதம்புராவில் 4.5 மி.மீ., நஜஃப்கரில் 8 மி.மீ., பூசாவில் 3.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தில்லியில் பருவமழை தொடங்கிய ஜூன் 1 முதல் இதுவரை 312 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை (307.7 மி.மீ.) விட அதிகமாகும்.

வெப்பநிலை: தில்லியில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 26.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 34.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.காற்றில் ஈரப்பதத்தின் அளவு 83 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 68 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் வியாழக்கிழமை பல்வேறு இடங்களில் காற்றின் தரம் 100 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது. இருப்பினும், நொய்டா செக்டாா் -22, நொய்டா செக்டாா்- 1, மதுரா சாலை, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், மந்திா் மாா்க், லோதி ரோடு உள்ளிட்ட இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாக ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: தில்லி வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 5 அன்று பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். ஆங்காங்கே சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com