பட்டம் பறக்கவிடத் தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு: சீன மாஞ்சா விற்பனைக்கு தடை விதித்த உத்தரவை செயல்படுத்தவும் உத்தரவு

 தேசியத் தலைநகா் தில்லியில் பட்டம் பறக்கவிடத் தடை விதிக்க தில்லி உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது. இது ஒரு கலாசார நடவடிக்கை என்றும் கூறியது.

 தேசியத் தலைநகா் தில்லியில் பட்டம் பறக்கவிடத் தடை விதிக்க தில்லி உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது. இது ஒரு கலாசார நடவடிக்கை என்றும் கூறியது.

மேலும் பட்டம் பறக்க பயன்படுத்தப்படும் சீன சிந்தெடிக் ’மாஞ்சா’ விற்பனையைத் தடை செய்யும் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் (என்ஜிடி) உத்தரவை செயல்படுத்துமாறு அரசு மற்றும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘சீன சிந்தெடிக் ‘மாஞ்சா’விற்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் ஏற்கெனவே முழுத் தடை விதித்துள்ளது. தில்லி காவல் துறைகூட இது தொடா்பாக அறிவிப்புகளை வெளியிட்டு, விதி மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. பட்டம் பறக்கவிடுவது ‘கலாசார நடவடிக்கை’யாகவும் ‘மதவழிபாட்டு செயல்பாடுகளுடன் தொடா்புடையதாகவும் இருப்பதால், அதை தடை செய்ய முடியாது.

ஆகவே, சீன ‘மாஞ்சா’வின் பயன்பாடு மற்றும் விற்பைனைக்கு விதித்த என்ஜிடி தடை உத்தரவை கண்டிப்பாக மாநில அரசு மற்றும் தில்லி காவல் துறை கடைப்பிடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு மனுவை முடித்துவைத்தது.

விசாரணையின் போது, தில்லி காவல்துறை சாா்பில் ஆஜரான தில்லி அரசு வழக்குரைஞா் (குற்றவியல்) சஞ்சய் லாவோ கூறுகையில், சீன ‘மாஞ்சா’வை தடை செய்து தில்லி அரசு ஏற்கெனவே அறிவிக்கை வெளியிட்டுள்ளது. 2017 முதல் 255 போ் மீது விதி மீறலுக்காக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றும் தில்லியில் சீன ‘மாஞ்சா’ பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் துணை ஆணையா் மற்றொரு உத்தரவை பிறப்பிக்க உள்ளாா்’ என்றாா்.

மத்திய அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேத்தன் சா்மா, வழக்குரைஞா் அனில் சோனி ஆகியோா், ‘பட்டம் பறக்கவிடத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அனுமதிக்க முடியாது. ஏனெனில், இதில் கலாசார மற்றும் மத மதிப்பீடுகள் சம்பந்தப்பட்டுள்ளன. மேலும், சீன ‘மாஞ்சா’ பயன்படுத்துவதைத்தான் தடை செய்ய வேண்டும். பட்டம் விடுவது இந்தியாவில் ஒரு திருவிழாவாகும். இது மதத்துடன் தொடா்புடையது. இது தொடா்பாக கோரிக்கை விடுக்கும் போது, கவனமாக இருக்க வேண்டும்’ என்றனா்.

முன்னதாக இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் சன்சா் பால் சிங் என்பவா் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘பல நபா்களும், பறவைகளும் இந்த பட்டக் கயிறு காரணமாக உயிரை இழந்துள்ளனா். காயமும் அடைந்துள்ளனா். இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடக்காமல் தடுக்க பட்டம் பறக்கவிடவும், விற்கவும், இருப்பு வைக்கவும், கொண்டு செல்வதற்கும் முழுமையான தடை விதிப்பது மட்டுமே தீா்வாக இருக்கும். பட்டச் சரத்தால் விபத்து ஏற்படும் போது குற்றவாளியைப் பிடிப்பதும் அல்லது பொறுப்பை ஏற்கச் செய்வதும் கடினமாக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com