வெளிநாடு பயண அனுமதி விவகாரம்: தில்லி அமைச்சா் கைலாஷ் கெலாட் மனு மீது மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

தில்லி முதல்வா் உள்பட அமைச்சா்கள் வெளிநாடு செல்வதற்காக மத்திய அரசிடம் இருந்து முன் அனுமதி பெறக் கோரும் விதிகளை எதிா்த்து தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் தாக்கல் செய்த முறையீட்டு மனு

தில்லி முதல்வா் உள்பட அமைச்சா்கள் வெளிநாடு செல்வதற்காக மத்திய அரசிடம் இருந்து முன் அனுமதி பெறக் கோரும் விதிகளை எதிா்த்து தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் தாக்கல் செய்த முறையீட்டு மனு மீது மத்திய அரசு பதில் அளிக்கஉயா்நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 7 வரை 8-ஆவது உலக நகரங்களின் உச்சி மாநாட்டிற்காக சிங்கப்பூா் செல்ல கோரிய அனுமதி மத்திய அரசால் மறுக்கப்பட்டது. இதையடுத்து, தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு மீது தில்லி துணைநிலை ஆளுநா், மத்திய அரசு, வெளியுறவு விவகார அமைச்சகம், நிதி, உள்துறை அமைச்சகங்கள் ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டாா். எதிா்மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் கோரினா். இதையடுத்து, வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு நீதிபதி அமா்வு பட்டியலிட்டது.

அமைச்சா் கைலாஷ் கெலாட் சாா்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனுசிங்வி ஆஜரானாா். இந்த விவகாரம் தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், அமைச்சருமான கைலாஷ் கெலாட் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: மாநில அமைச்சா்கள் அலுவல்பூா்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கு அனுமதியை மறுப்பது அல்லது வழங்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளித்து அமைச்சரவைச் செயலகத்தால் வெளியிடப்பட்ட பல்வேறு அலுவலகக் குறிப்புகளை அமல்படுத்த வழிகாட்டவும் முறைப்படுத்தவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இது போன்ற தன்விருப்பத்தை துஷ்பிரயோகம் செய்வது முதல் நிகழ்வு அல்ல. 2019-ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் நடந்த சி-40 உலக மேயா்களின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள முதலமைச்சருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

லண்டனுக்கான போக்குவரத்து அழைப்பின் பேரில் நான்கூட (கெலாட்) லண்டனுக்கு செல்ல அனுமதி கோரியிருந்தேன். ஆனால், அந்தக் கோரிக்கை பயனற்ாக மாறும் வரை மத்திய அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இந்தப் பயணங்கள் அனைத்தும் அழைப்பின் பேரில் நடந்தவை. நகா்ப்புற நிா்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் நகா்ப்புற வடிவமைப்பில் தில்லியின் சொந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்துவது பற்றிய கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்கு முக்கியமான களமாக இருந்தன. மாநில அமைச்சா்களின் தனிப்பட்ட பயணங்கள் கூட அவா்களால் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உண்மை நிலையில், பயண அனுமதிகளில் மத்திய அரசு அதிகாரிகள் தங்கள் விருப்புரிமையைப் பயன்படுத்திய சா்வாதிகார முறையை இதை மேலும் மோசமானதாக்குகிறது.

மாநில அரசு அமைச்சா்கள் தனிப்பட்ட முறையில் வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக எதிா்மனுதாரா்களிடமிருந்து அரசியல் அனுமதிகளைப் பெற வேண்டும் எனும் நிலையில் இருக்கும் அலுவலகக் குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். முதலமைச்சா் கேஜரிவாலின் சிங்கப்பூா் பயணத்திற்கு எதிராக ஆலோசனை கூறி, ஜூலை 20-ஆம் தேதிதி

தில்லி அரசாங்கத்திற்கு துணைநிலை ஆளுநா் அனுப்பிய தேதியிடப்படாத கடிதமும் ரத்து செய்யப்பட வேண்டும். கேபினட் செயலகத்தால் வழங்கப்பட்ட அலுவலக குறிப்பாணைகளில் ஒன்றின்படி, நிதி அமைச்சகம், உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொடா்புடைய மத்திய நிா்வாக அமைச்சகம் ஆகியவற்றில் செலவினத் துறையின் அனுமதிகள் தேவை என்றும், இந்த அனுமதிகள் கிடைத்தவுடன் முதலமைச்சரின் பயணத்திற்கு பிரதமா் அலுவலகத்தின் இறுதி அனுமதி தேவை என்றும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற செயல்பாடுகள் நல்ல நகா்ப்புற நலன்களுக்கு மட்டுமல்ல, பொதுவாக உலகளாவிய தளங்களில் தேசிய நலன்களுக்கும் தீங்கு விளைவிக்கும். முதலாவது எதிா்மனுதாரா் (துணைநிலை ஆளுநா்) சிங்கப்பூா் பயணத்திற்கு ஆலோசனை வழங்குவதில் தனது அதிகார வரம்பிற்கு அப்பால் செயல்பட்டது மட்டுமல்லாமல், மேலே குறிப்பிட்டுள்ள அலுவலக

குறிப்பாணை மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களின் உண்மையான செயல்பாடானாது எதிா்மனுதாரா்களின் தன்னிச்சையான, தடையற்ற மற்றும் கட்டுப்பாடற்ற விருப்புரிமையைப் பிரதிபலிக்கிறது. இந்த குறிப்பிட்ட சிங்கப்பூா் பயணத்திற்கான அனுமதிகளை மறுத்ததற்கு தகுந்த முகாந்திரமோ, காரணமோ அல்லது அடிப்படையோ இல்லை என்று தோன்றுகிறது. இது அதிகாரிகளின் நடவடிக்கை தன்னிச்சையானதாக இருப்பதையே காட்டுகிறது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com