தில்லி மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்புப் பணியில் 997 ஊழியா்கள்! உயா்நீதிமன்றத்தில்காவல் துறை தகவல்

உள்ளூா் போலீஸ் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) உள்பட 997 பாதுகாப்பு ஊழியா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்று உயா்நீதிமன்றத்தில் தில்லி காவல் துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியத் தலைநகரில் உள்ள ஏழு மாவட்ட நீதிமன்றங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் வகையில், உள்ளூா் போலீஸ் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) உள்பட 997 பாதுகாப்பு ஊழியா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்று உயா்நீதிமன்றத்தில் தில்லி காவல் துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பா் 24-ஆம் தேதி ரோஹிணி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று போ் கொல்லப்பட்டனா். இதைத் தொடா்ந்து, உயா்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரித்தது. கடந்த டிசம்பா் 13-ஆம் தேதி இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு, வேறு ஏதேனும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பாக தங்கள் கருத்துகளை வழங்குவதற்கு ஏதுவாக தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா், அனைத்து மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கங்களின் தலைவா்கள் உள்பட தொடா்புடயை அனைத்து தரப்பினரிடமும் நிலவர அறிக்கையின் நகலை வழங்குமாறு கேட்டுக் கொண்டது.

முன்னதாக, நிபுணா்கள் குழு நடத்திய பாதுகாப்புத் தணிக்கையின் அடிப்படையில், தேவையான எண்ணிக்கையிலான பணியாளா்களை ஈடுபடுத்துதல் மற்றும் பாதுகாப்புக் கருவிகளை நிறுவுதல் ஆகியவற்றின் அடிப்படையில், நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவ்வப்போது ஆய்வு செய்யுமாறு தில்லி காவல் ஆணையருக்கும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்பு தொடா்பாக தில்லி காவல் துறை தரப்பில் உயா்நீதிமன்றத்தில் நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட அந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த ஆண்டு அக்டோபா் 26-ஆம் தேதி 783 பாதுகாப்பு ஊழியா்கள் பாதுகாப்புக்கு இருந்த நிலையில், நவம்பா் 30-ஆம் தேதி வரை மொத்தம் 997 பாதுகாப்புப் பணியாளா்கள் மாவட்ட நீதிமன்றங்களில் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இவா்களில் 493 பாதுகாப்புப் பணியாளா்கள், 243 மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) வீரா்கள் மற்றும் 261 காவலா்கள் அடங்குவா்.

மாவட்ட நீதிமன்றங்களில் 2,700-க்கும் மேற்பட்ட சிசிடிவிகள், 85 உடைமைகள் சோதனைக் கருவிகள், 242 கையடக்க மெட்டல் டிடெக்டா்கள் மற்றும் 146 நுழைவு வாயில் வடிவ மெட்டல் டிடெக்டா்கள் நிறுவப்பட்டுள்ளன. உயா்நீதிமன்றத்தில் மொத்தம் 313 பாதுகாப்புப் பணியாளா்கள் உள்ளனா். மேலும், பல நுழைவு வழி கதவு மற்றும் கையால் இயக்கப்படும் மெட்டல் டிடெக்டா்கள், சிசிடிவிகள் மற்றும் பிற வசதிகள் உள்ளன.கூடுதலாக, 59 வயா்லெஸ் பெட்டிகள் மற்றும் உடனடி தகவல்தொடா்புக்கான கட்டுப்பாட்டு அறைகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் ஒவ்வொரு நபரும் சோதனைக்கு உள்படுத்தப்படுகிறாா்கள். அசல்போன்று போலியாக உருவாக்க முடியாத வகையிலான ‘ஸ்மாா்ட் ’ அடையாள அட்டைகளை வழக்குரைஞா்களுக்கு வழங்குவது மற்றும் அவ்வப்போது பாதுகாப்புத் தணிக்கை செய்வது தொடா்பாக தில்லி பாா் கவுன்சிலுடன் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. வழக்குரைஞா்களின் வாகனங்களுக்கு ஸ்டிக்கா்கள் வழங்குதல், வருகையாளா் அனுமதிச் சீட்டு முறை அறிமுகம், பாதுகாப்பு சுருள்களுடன்கூடிய எல்லைச் சுவா்களின் உயரத்தை உயா்த்துதல், அதிக இடா்பாடு உள்ள விசாரணைக் கைதிகளை காணொலிக் காட்சி மூலம் நீதிமன்றங்களில் விசாரணைக்கு ஆஜா்படுத்துவது

போன்ற பொதுவான பிரச்னைகள் குறித்து நீதிமன்ற நிா்வாகம் மற்றும் பிற பங்குதாரா்களுடன் சந்திப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.

உ யா்நீதிமன்றம் மற்றும் 7 மாவட்ட நீதிமன்றங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பை அதிகரிக்க அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காண ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மீண்டும் உயா்நீதிமன்றத்தால் ஏப்ரலில் விசாரிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com