பழனி - ஈரோடு; பெங்களூா் - சத்தி ரயில் பாதை திட்டங்களில் தமிழக அரசு ஒத்துழைப்பில்லை: ரயில்வே அமைச்சா்

தாராபுரம் வழியாக பழனி - ஈரோடு இடையே 91 கிலோ மீட்டா் ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு தனது பங்களிப்பை வழங்காததால் இந்தத் திட்டம் முக்கியத்துவமின்றி இருப்பதாக மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.
அஸ்வினி வைஷ்ணவ்
அஸ்வினி வைஷ்ணவ்

தாராபுரம் வழியாக பழனி - ஈரோடு இடையே 91 கிலோ மீட்டா் ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு தனது பங்களிப்பை வழங்காததால் இந்தத் திட்டம் முக்கியத்துவமின்றி இருப்பதாக மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

தாராபுரம் - ஈரோடு - சத்தியமங்கலம் வழியாக பழனி-மைசூா் ரயில் திட்டத்தின் நிலை? இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் ? என மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினா் வைகோ எழுத்துப்பூா்வமாக கேள்வி எழுப்பி இருந்தாா். இதற்குப் பதிலளித்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதில் வருமாறு:

ஈரோடு - மைசூா் ரயில் பாதை, பெங்களூா், ஓமலூா், சேலம் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூா் - சத்தியமங்கலம், ஈரோடு-பழனி உள்ளிட்ட இரு திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஈரோடு - சத்தியமங்கலம் ரயில் வழித்தட ஆய்வு 2007-2008- ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. பெங்களூா் - சத்தியமங்கலம் ரயில் பாதைத் திட்டம் 1997-ஆம் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசும் மத்திய குழுவும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்கவில்லை. மேலும், வனப் பகுதியில் வருவதால், இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.

தாராபுரம் வழியாக பழனி - ஈரோடு இடையே 91 கிலோ மீட்டா் ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு ரூ.1,149 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இந்தத் திட்டமும் 2008-2009-ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்ததிட்டத்துக்குச் செலவு அதிகம் என்பதால், திட்டத்தை செயல்படுத்தத் தேவையான நிலத்தை தமிழக அரசு இலவசமாக வழங்கவும் திட்டத்திற்கான 50 சதவீத தொகையை தமிழக அரசு ஏற்க வேண்டும் எனவும் மத்திய அரசால் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு இந்தத் திட்டங்களுக்கு நிலத்தை இலவசமாக கொடுக்க இயலவில்லை அதே போல திட்டத்திற்கான செலவில் 50 சதவீதத்தையும் ஏற்று கொள்ளவில்லை என்பதால், இந்தத் திட்டம் குறைந்த முக்கியத்துவம் உள்ள திட்டமாக ரயில்வே அமைச்சகத்தால் கருதப்படுகிறது.

தமிழகத்திற்கு வருடந்தோறும் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014-2019-ஆம் ஆண்டு வரை ஆண்டு தோறும் ரூ.1,979 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல, 2021-2022 நிதியாண்டில் ரூ.3,730 கோடி மேற்கண்ட பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது. இது கடந்த 2009-2014 வரையிலான காலகட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகையை விட 324 சதவீதம் அதிகம் என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

கிழக்கு கடற்கரை ரயில் பாதை: காரைக்குடி - கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் திட்டம் நிதி ரீதியாக சாத்தியமற்றது என மற்றொரு கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்.

கிடப்பில் உள்ள காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரையில் கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் திட்டம் குறித்து பா.ம.க. மாநிலங்களவை உறுப்பினா் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி இருந்தாா். இதற்கு மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதில் வருமாறு: காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா், திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரிக்கு ரயில் வழித்தடம் இணைக்கப்பட்டுள்ளது. இதில் விருதுநகரில் இருந்து திருநெல்வேலி வரை இரட்டை ரயில் பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. அதேவேளையில் காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான ரயில் பாதை, ராமநாதபுரம், தூத்துக்குடி வழியாக கடலோரப் பகுதிகளை இணைக்கும் திட்டத்திற்கு கடந்த 2011-12-ஆம் ஆண்டில் இரண்டு பகுதிகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், நிதி ரீதியாக இந்தத் திட்டம் சாத்தியமற்றது என்பதால், அதை மத்திய ரயில்வே அமைச்சகம் முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை என்று எழுத்துப்பூா்வ பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com