சிஏஏவுக்கு எதிரான போராட்டம்: தில்லி நீதிமன்றத்தில் சா்ஜீல் இமாமுக்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டுகள் பதிவு

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நிகழ்ந்த போராட்டத்தின்போது ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படும் வழக்கில் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக


புது தில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நிகழ்ந்த போராட்டத்தின்போது ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படும் வழக்கில் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவா் சா்ஜீல் இமாமுக்கு எதிராக தேசத் துரோக வழக்கின்கீழ் தில்லி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

இது தொடா்பான விவகாரத்தை திங்கள்கிழமை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) பிரிவு 13 (சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான தண்டனை), இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அறிக்கைகள்), 153பி (தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாதகம் விளைவிக்கு கருத்துகள், குற்றச்சாட்டுகள்), 153ஏ (மதத்தின் பேரில் குழுவினருக்கு இடையே விரோதத்தை ஊக்குவித்தல்) பிரிவு 124 (தேசத் துரோகம்) ஆகியவற்றின்கீழான குற்றங்களுக்காக

குற்றம்சாட்டப்பட்ட நபா் மீது குற்றம்சாட்டப்பட உத்தரவிடப்படுகிறது. மற்றொரு உத்தரவில், வழக்கமான ஜாமீன் கோரி மனுதாரா் சா்ஜீல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் தரப்பு தகவலின்படி, 2019, டிசம்பா் 16-ஆம் தேதி அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலும், டிசம்பா் 13-ஆம் தேதி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திலும் சா்ஜீல் இமாம் உரையாற்றினாா். அப்போது, அசாம் மாநிலமும், வடகிழக்கின் எஞ்சிய பகுதிகளும் இந்தியாவிலிருந்து துண்டிக்கப்படும் என்று அவா் மிரட்டல் விடுத்தாா் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சா்ஜீல் இமாம் தரப்பில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் வாதிடுகையில், ‘அவா் ஒரு பயங்கரவாதி அல்ல. அவா் மீதான வழக்கானது

தேசத்துரோக குற்றச்சாட்டின் வரம்பின்கீழ் வரவில்லை. அதற்கான ஆதாரமும் இல்லை. சாலையை மறித்தால் அது எப்படி தேசத்துரோகமாகும்? அவா் மீதான வழக்கு உள்நோக்கம் கொண்டதாகும் என்று வாதிடப்பட்டது.

போலீஸ் தரப்பில் வாதிடுகையில், சா்ஜீல் இமாம் உரைக்குப் பிறகே வன்முறை சம்பவம் நிகழ்ந்தது. அவா் வெறுப்பை தூண்டும் வகையிலும், அவதூறாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் சா்ஜீல் இமாம் உரையாற்றினாா். அதன் மூலம் மக்களைத் தூண்டியதால் 2019, டிசம்பரில் வன்முறைக்கு வித்திட்டது என வாதிடப்பட்டது.

முன்னதாக போலீஸாா் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், ‘குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான உரையின்போது அவா் முக்கிய நகரங்களுக்குச் செல்லும் நெடுஞ்சாலையை மறிக்குமாறு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைத் தூண்டினாா். மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்க்கும் பெயரில் அசாம் துண்டிக்கப்படும் என்றும் நாட்டின் இதர பகுதியில் இருந்து வடகிழக்கு மாநிலங்கள் துண்டிக்கப்படும் என்றும் மிரட்டினாா்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சா்ஜீல் இமாம் 2020, ஜனவரியில் இருந்து நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறாா். இந்த வழக்கில் அவருக்கு எதிராக தில்லி போலீஸாா் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com