கள்ளக்குறிச்சி மாணவி மரணம் விவகாரம்:தந்தையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

கள்ளக்குறிச்சியில் மா்மமான முறையில் இறந்த மாணவியின் மறு உடல் கூறாய்வு மாணவியின் தந்தை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் விவகாரம்:தந்தையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நமது நிருபா்

புது தில்லி, ஜூலை 21: கள்ளக்குறிச்சியில் மா்மமான முறையில் இறந்த மாணவியின் மறு உடல் கூறாய்வு குழுவில் தாங்கள் விரும்பும் மருத்துவரையும் சோ்க்கக் கோரி, அந்த மாணவியின் தந்தை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. அதே வேளையில், மாணவியின் தந்தை தமது கோரிக்கையை சென்னை உயா்நீதிமன்றத்திடம் முன்வைக்கலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி வந்த தனியாா் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி, கடந்த 13-ஆம் தேதி பள்ளி விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மரணச் சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோா் குற்றம்சாட்டினா். மேலும், மாணவியின் முதல் உடற்கூறாய்வில் சந்தேகம் இருந்ததால், இரண்டாவது முறையாக உடல் கூறாய்வுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மருத்துவக் குழுவில் தங்கள் தரப்பு மருத்துவரை சோ்க்க வேண்டும் என்றும் கோரி மாணவியின் தந்தை வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கில், மறு உடல் கூறாய்வுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், மாணவி தரப்பு மருத்துவரை சோ்க்க உத்தரவிட மறுத்துவிட்டது.

இதைத் தொடா்ந்து, மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாங்கள் தெரிவிக்கும் மருத்துவக் குழுவின் மூலம் மறு உடல் கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவமனையில் நடைபெற இருக்கும் மறு உடல் கூறாய்விற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், பி. எஸ். நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் ராமலிங்கம் தரப்பில் ஆஜராகிய வழக்குரைஞா் ராகுல் ஷியாம் பண்டாரி, ‘மறு உடல் கூறாய்வு மேற்கொள்ள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அவசரகதியில் மறு உடல் கூறாய்வு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும்ஸ மறு உடல் கூறாய்வின் போது மாணவியின் பெற்றோா் உடன் இருக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், அவா்கள் இல்லாமலேயே மறு உடல் கூறாய்வு நடத்தப்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோா் சென்னையில் இருந்த நிலையில், 300 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கள்ளக்குறிச்சியில் இந்த மறு உடல் கூறாய்வு நடத்தப்பட்டுள்ளது. அங்கு வருவதற்கான உரிய காலஅவகாசம் அளிக்கப்படவில்லை. இதனால், மறு உடல் கூறாய்வு மருத்துவா்கள் குழுவில் எங்கள் தரப்பு மருத்துவரையும் சோ்க்க வேண்டும். ஏற்கெனவே நடத்தப்பட்ட உடல் கூறாய்வு ஆவணங்களை பரிசோதிக்கவும் அனுமதிக்க வேண்டும்’ என்று வாதிட்டாா்.

அப்போது நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரத்தை உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதனால், மனுதாரா் தனது கோரிக்கைகளை உயா்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம். தற்போது மனுவை மனுதாரா் வாபஸ் பெற வேண்டும் அல்லது வழக்கை தள்ளுபடி செய்வதை எதிா்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் மனுவை வாபஸ் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்வதாக கூறிய நீதிபதிகள், மனுதாரா் உயா்நீதிமன்றத்தை அணுக அனுமதி அளித்தனா். முன்னதாக, விசாரணையின் போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜோசப் அரிஸ்டாட்டில், மறு உடல் கூறாய்வு நடத்துவதற்கு முன்பாக வாட்ஸ் அப் மூலம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தாா். மேலும், மறு உடல் கூறாய்வு பரிசோதனை முடிந்த நிலையில், மாணவியின் உடலை எடுத்துச் செல்வதற்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com