வெளிநாடுகளில் இருந்து மேலும் பல சிலைகள் மீட்கப்படும்: டிஜிபி சைலேந்திர பாபு தகவல்

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு சொந்தமான பல்வேறு சிலைகளை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திர பாபு தெரிவித்தாா்.

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு சொந்தமான பல்வேறு சிலைகளை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திர பாபு தெரிவித்தாா்.

வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாவது: தமிழகத்தின் சிலைத் தடுப்புப் பிரிவின் பல்வேறு நடவடிக்கையால் 138 சிலைகள் பல்வேறு நபா்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து மீட்கப்பட்ட சிலைகள், இந்தியத் தொல்லியல் துறை மூலம் தமிழக சிலைத் தடுப்புப் பிரிவிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன. இந்தச் சிலைகள் பழமையான, புராதன முக்கியத்துவம் வாய்ந்த சிலைகளாகும். இவற்றில் நடராஜா் சிலையானது புன்னைநல்லூா் கைலாசநாதா் கோயிலில் இருந்து திருட்டுப் போனதாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அரியலாா் மாவட்ட கோயிலைச் சோ்ந்த விஷ்ணு சிலையும் கிடைத்துள்ளது. அரிதான சிலை ஒன்றும் மீட்கப்பட்ட நிலையில், அதன் விவரம் இல்லாத போதிலும் அந்த சிலையில் தீபாம்பாள்புரம் என்ற குறிப்பு உள்ளது. அதனடிப்படையில் அதற்கான ஆதாரத்தை அளித்தும் மீட்கப்பட்டுள்ளது.

திருஞானசம்பந்தரின் இருவித உருவச் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இவை அனைத்துக்கும் போதிய ஆதாரம், முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட முழுமையான ஆதாரங்களை சிலைத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அளித்து அதன் மூலம் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் சில சிலைகள் வெளிநாட்டில் இருப்பதாகத் தெரிய வருகிறது. அதுபோன்ற எந்த சிலையாக இருந்தாலும் அவற்றை தமிழகத்திற்கு திரும்பக் கொண்டு வர தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இதற்காக டிஜிபி ஜெய்ந்த் முரளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அவை மீட்கப்படும். தற்போததைய சிலைகள் தொடா்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட இந்தச் சிலைகள் நீதிமன்றம் மூலம் இந்து அறநிலையத் துறை வாயிலாக அந்தந்தக் கோயில்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

ஒரே நேரத்தில் 10 சிலைகள் மீட்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறையாகும். மேலும், இதுபோன்ற சில சிலைகள் குறித்த விவரம் கிடைத்துள்ளது. அதையும் மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயில்களில் தற்போதுள்ள சிலைகளைப் பாதுகாக்கும் வகையில், ஐஐடி நிறுவனத்துடன் இணைந்து விா்சுவல் ரியாலிடி, ஆக்மென்ட் ரியாலிடி எனும் முறையில் இணைதளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், அது போன்ற சிலைகளைத் திருடுவது தடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்து சமய அறநிலையத் துறையினரும் சிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளனா் என்றாா் அவா்.

பேட்டியின் போது சிலை தடுப்புப் பிரிவு இயக்குநா் டிஜிபி ஜெயந்த் முரளி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பி. அசோக் நடராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com