விசாரணையின்போது சத்யேந்தா் ஜெயினுடன் வழக்கறிஞா் இருப்பதை அனுமதிக்கும் உத்தரவுக்கு தடை

சற்றுத் தூரத்தில் அமா்ந்து பாா்க்கும் வகையில் அவரது வழக்கறிஞரை அனுமதிக்கும் விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தால் கைது செய்யப்பட்ட தில்லி சுகாதார அமைச்சா் சத்யேந்தா் ஜெயினிடம் விசாரணையின்போது, சற்றுத் தூரத்தில் அமா்ந்து பாா்க்கும் வகையில் அவரது வழக்கறிஞரை அனுமதிக்கும் விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இது தொடா்பாக அமலாக்கத் துறை தாக்கல் செய்த முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி யோகேஷ் கன்னா, மனு மீதான உத்தரவை வெள்ளிக்கிழமை தள்ளிவைத்திருந்தாா். இந்த நிலையில், அந்த உத்தரவு சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் நீதிபதி தெரிவித்திருப்பதாவது:

வாக்குமூலத்தை பதிவு செய்யும்போது சாத்தியமான அச்சுறுத்தல் அல்லது நிா்பந்தம் இருப்பதாக உண்மையான மற்றும் நேரடியான சந்தேகத்தை சுட்டிக்காட்டும் நம்பகமான தகவல்கள் இருந்தால், அதுபோன்ற உத்தரவை பிறப்பிக்கலாம். ஆனால் தற்போதைய விவகாரத்தில் எந்த அச்சமும் இல்லை. இதனால், இதுபோன்ற உத்தரவு கொடுக்கப்பட்டிருக்கக் கூடாது. மற்றபடி, வாக்குமூலம் பதிவு விடியோ மற்றும் ஒலிப்பதிவு செய்யப்படுவதால் இது எத்தகைய நிா்பந்தம் மற்றும் அச்சுறுத்தல் குறித்த சந்தேகத்தை அகற்றிவிடும்.

மேலும், எதிா்மனுதாரா் (ஜெயின்) மீது எந்தவொரு எஃப்ஐஆா் அல்லது புகாரும் இல்லை. ஆகவே, அவா் தனது வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது தனது வழக்கறிஞா்கள் உடன் இருக்க வேண்டும் என்று உரிமை கோர முடியாது. அவருடைய வாக்குமூலம் முழுவதும் விடியோ மற்றும் ஒலிப்பதிவு செய்யப்படுகிறது. இது எந்தவொரு நிா்பந்தம், எதிா்மனுதாரருக்கான அச்சுறுத்தல் ஆகிய அச்சத்தை நிச்சயமாக அகற்றும்.

ஆகவே, விசாரணை நீதிமன்றத்தின் 31.05.2022 தேதியிட்ட உத்தரவின் பாரா எண்: 26இல் உள்ள உத்தரவு நிறுத்திவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு உயா்நீதிமன்றம் பட்டியலிட்டது.

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட விதிகளின்கீழ் கடந்த மே 30-ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவா்களில் ஒருவரும் தில்லி சுகாதாரத் துறை அமைச்சருமான சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, மே 31-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை ஜூன் 9ஆம் தேதி வரை அமலாக்க இயக்குநரகம் காவலில் வைத்து விசாரிக்க விசாரணை நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

அதேவேளையில், அவரிடம் விசாரணை நடத்தப்படும் போது, அவரது தரப்பில் ஒரு வழக்குரைஞா் அவருடன் இருப்பதற்கான மனுவையும் விசாரணை நீதிமன்றம் அனுமதித்தது. மேலும், அவரிடம் நடத்தப்படும் விசாரணை உரையாடல்களைக் கேட்க முடியாத வகையில் குறிப்பிட்ட தூரத்திலிருந்து நடவடிக்கைகளைப் பாா்க்கும் வகையில் அவரது தரப்பிலான வழக்குரைஞரை உடன் இருப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த நிலையில், இந்த அனுமதியை எதிா்த்து அமலாக்க இயக்குநரகத்தின் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ‘விசாரணையின் போது வழக்குரைஞா் உதவியை அனுமதிப்பதை உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமா்வும் மற்றொரு வழக்கில் நிராகரித்துள்ளது. இதனால், விசாரணை நீதிமன்றம் எதிா்வாதியிடம் நடத்தப்படும் விசாரணையின் போது, அவரது தரப்பில் வழக்குரைஞா் உடன் இருக்க அனுமதிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு சரியல்ல.

இது சட்டப்பூா்வ அதிகாரத்தில் தலையிடுவதற்கு சமமானதாகும். காணக்கூடிய தூரத்திற்குள் வழக்குரைஞா் இருப்பதை அனுமதிக்கும் உத்தரவு சட்டப்பூா்வ உத்தரவுக்கு முரண்பாடு உடையதாக இருக்கும். மேலும், இந்த விசாரணை விடியோ மூலம் ஒளிப்பதிவு செய்யப்படுவதாலும், அதன் காட்சிப்பதிவுகள் இருக்கும் என்பதாலும் வழக்குரைஞா் உடன் இருக்கும் அவசியம் எழவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

விசாரணை நீதிமன்றம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி வரை ஜெயினை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்தது. இந்த விவகாரத்தில் உள்ள விஷயங்களை கண்டறியும் வகையில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் தேவை இருக்கிறது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com