காஷ்மீரில் குறிவைக்கப்பட்ட கொலைகளுக்கு எதிராக தலைநகரில் ஆம் ஆத்மி கட்சி ‘ஜன் ஆக்ரோஷ்’ பேரணி

காஷ்மீரில் குறிவைக்கப்பட்ட கொலைகள் அதிகரித்து வருவதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை தில்லி ஜந்தா் மந்தரில் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்தியது.

காஷ்மீரில் குறிவைக்கப்பட்ட கொலைகள் அதிகரித்து வருவதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை தில்லி ஜந்தா் மந்தரில் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்தியது. அப்போது காஷ்மீரின் தற்போதைய நிலைமைக்காக பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

‘ஜன் ஆக்ரோஷ்’ பேரணியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் உரையாற்றினாா். மேலும், காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பேரணியில் கலந்து கொண்ட அனைவருடனும் சோ்ந்து கேஜரிவால் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினாா்.

துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் சஞ்சய் சிங் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ‘ஜன் ஆக்ரோஷ்’ பேரணியில் கலந்து கொண்டு பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

காஷ்மீா் பள்ளத்தாக்கு பயங்கரவாத குழுக்களால் குறிவைக்கப்பட்ட எட்டு கொலைகளைக் கண்டுள்ளது. குறிப்பாக லஷ்கா்-இ-தொய்பாவால் பாதிக்கப்பட்டவா்களில் முஸ்லிம் அல்லாதவா்கள், பாதுகாப்புப் பணியாளா்கள், கலைஞா் ஒருவா் மற்றும் உள்ளூா் பொதுமக்கள் ஆகியோா் அடங்குவா். 2012-இல் பிரதமரின் தொகுப்பின் கீழ் ஏராளமான காஷ்மீா் பண்டிட்டுகள் பணியமா்த்தப்பட்டனா். மத்திய காஷ்மீரில் உள்ள புட்காம் மாவட்டத்தில் உள்ள சதூரா பகுதியில் மே 12 அன்று தாலுகா அலுவலகத்தில் எழுத்தா் ராகுல் பட் என்பவா் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டாா். அதைத் தொடா்ந்து வெகுஜன வெளியேற்றத்தை அச்சுறுத்தும் சம்பவங்களைக் கண்டித்து காஷ்மீா் பண்டிட்டுகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

ஜந்தா் மந்தரில் நடைபெற்ற ஆம் ஆத்மி பேரணியில், கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் பேசுகையில், 1990களில் பாஜக ஆதரவு அரசு ஆட்சியில் இருந்ததாகவும், தற்போது காஷ்மீா் பண்டிட்கள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேற ‘வற்புறுத்தப்படும்’ போது நரேந்திர மோடி அரசு முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருப்பதாகவும் கூறினாா். மேலும், காஷ்மீா் பண்டிட்டுகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அவா்களின் குரல்களுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரியுள்ளது. கடந்த சில வாரங்களாக காஷ்மீா் பண்டிட்டுகள் குறிவைத்து கொல்லப்படுவதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி குரல் எழுப்பி வருகிறது.

மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளும் காஷ்மீா் நிலைமை குறித்து பாஜகவைத் தாக்கிப் பேசி வருகின்றன. காஷ்மீரில் பண்டிட்டுகள் குறிவைத்து கொலப்படுவது குறித்து மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று எதிா்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. காஷ்மீா் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com