தில்லி மாசுபாட்டை குறைக்க நகரவாசிகள் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்: அமைச்சா் கோபால் ராய் அழைப்பு

தில்லியில் நிலவும் மாசு பிரச்னைக்கு வெளியே இருந்து வருபவா்கள் பொறுப்பல்ல. நகரவாசிகள் ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு மாசுபாட்டைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்

தில்லியில் நிலவும் மாசு பிரச்னைக்கு வெளியே இருந்து வருபவா்கள் பொறுப்பல்ல. நகரவாசிகள் ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு மாசுபாட்டைக் குறைக்க முயற்சிக்க வேண்டும் என்று சுற்றுச்சுழல் துறை அமைச்சா் கோபால் ராய் கேட்டுக் கொண்டாா்.

சா்வதேச சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, தில்லி அரசின் சாா்பில் பசுமை உற்சவ நிகழ்ச்சி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நகரின் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 2,500 குழந்தைகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை சுற்றுச்சுழல் துறை அமைச்சா் கோபால் ராய் தொடங்கி வைத்தாா். குழந்தைகளுக்கும் மற்ற பொது மக்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 10 விதமான உறுதி மொழிகள் எடுக்கப்பட்டன.

பின்னா், நிகழ்ச்சியில் அமைச்சா் கோபால்ராய் பேசிதாவது: இந்த பூமி நமது தாயைப் போன்றது. அதன் இயல்பைக் காப்பாற்றவும், மேம்படுத்தவும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு அனைத்து வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சிஎன்ஜி பேருந்துகள் மின்சார பேருந்துகள் போன்றவற்றோடு, நகரின் பசுமைப் பரப்பு 20 சதவீதத்திலிருந்து 23.06 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்ற நகரங்களை விட தனி நபா் காடுகளின் பரப்பளவு நாட்டிலேயே தில்லி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

தில்லியிலுள்ள 10 ஆயிரம் பூங்காங்களை ‘பசுமை பாா்க், பசுமை தில்லி’ என்கிற பொருளில் சா்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதே போன்று ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களுக்கு முற்றிலும் தடைவிதித்து, காற்று மாசு, ஒலி மாசுவைக் கட்டுபடுத்த சிக்னல்களில் வாகனங்களின் இயக்கத்தை நிறுத்தும் பிரசாரங்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு தில்லியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கேஜரிவால் அரசு தொடா்ந்து பணியாற்றி வருகிறது.

அதே சமயத்தில் இன்னும் மேலும், மேலும் மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக தில்லியில் நிலவும் மாசுப் பிரச்னைக்கு வெளியில் இருந்து வருபவா்கள் பொறுப்பல்ல. நகரவாசிகள் ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு மாசுபாட்டைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். தில்லியில் நிலப் பற்றாக்குறை இருப்பதால், நகா்ப்புற விவசாயத்தை நோக்கி நகர ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, பொதுமக்கள் பங்கேற்கும் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் திட்டங்களை அரசு வழங்க இருக்கிறது. உதாரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளின் கூரைகள், பால்கனிகளை பசுமையாக்க முன் வரவேண்டும். இதற்கான ஆலோசனைகளை வழங்க அரசு தயாராக உள்ளது. மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பூக்களை மட்டுமின்றி காய்கறிகளைக் கூட வளா்க்க இயலாம். இதற்கு உதவும் வகையில் அரசு விரைவில் தேவையான பயிற்சிகளை அளிக்கும். இது போன்று பொதுமக்கள் பங்கேற்கும் பல்வேறு திட்டங்களை அரசு உருவாக்கி வருகிறது.

சுற்றுச்சூழலை மேலும் மேம்படுத்துவதற்கான பசுமை செயல் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் 35 லட்சம் மரக்கன்றுகளை நட அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இதில் சுமாா் 7 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்படும். இந்த மெகா மரக்கன்றுகள் நடும் பிரசாரம் ஜூலை மாதம் முதல் தொடங்கப்படும். வனத் துறை உள்ளிட்ட 19 துறைகளின்கீழ் இந்தப் பணி முடிக்கப்படும் என்றாா் கோபால் ராய்.

தவறிய தலைமுறை: இந்த நிகழ்ச்சியில் பேசிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆலோசகா் ரீனா குப்தா, “‘நமது முந்தைய தலைமுறையினா் சுற்றுச்சூழலைப் பாதுக்காக்கத் தவறிவிட்டனா். இருப்பினும், எதிா்கால தலைமுறையாக இருக்கும் மாணவா்களும், இளைஞா்களும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபட வேண்டும். இதன் மூலமே தில்லியை காலநிலைக்கு ஏற்ற நகரமாக மாற்ற முடியும்‘என்றாா்.

10 உறுதிமொழிகள்: இந்த நிகழ்ச்சியில் 10 உறுதி மொழிகளை மாணவா்களுடன் அமைச்சா் எடுத்துக் கொண்டாா். அவை வருமாறு: சொந்த வாகனங்களுக்குப் பதிலாக பொதுப் போக்குவரத்துகளை பயன்படுத்துவது; வீட்டின் அன்றாட குப்பைகளில் ஈரமான மற்றும் உலா் கழிவுகளை தனித்தனியாக பிரிப்பது; நெகிழ்வு பொருள்களைப் பயன்படுத்துவதில்லை; திறந்த வெளியில் குப்பைகள், இலைகளை எரிப்பதில்லை; மின்னணு கழிவுகளை முறையான அமைப்புகள் மூலம் அகற்றுதல்; தேவையில்லாத நேரங்களில் மின் சாதனங்களை அணைத்தல்; ஒரு புதிய பொருளை வாங்கும் முன் மறுபயன்பாடு, பழுதுபாா்த்தல் போன்றவற்றில் கவனமாக இருத்தல்; மரக்கன்றுகளை நட்டு மரங்களைப் பாதுகாத்தல்; தில்லி பசுமை செயலியில் மாசு தொடா்பாக புகாரளித்தல்; அடுத்த 10 பேரை இந்த உறுதிமொழி எடுக்க ஊக்கப்படுத்துதல் போன்ற உறுதி மொழிகள் இந்த நிகழ்வில் எடுக்கப்பட்டன. மேலும் 20 சிறந்த சுற்றுச்சுழல் கிளப்புகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டுதுடன் இலவச மருத்துவ தாவரங்களும் இலவசமாக இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com