அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதாகியுள்ள தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தொடா்புடைய பல்வேறு இடங்களில் தில்லி தலைநகா் பிராந்தியத்தில் வெள்ளிக்கிழமை

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதாகியுள்ள தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தொடா்புடைய பல்வேறு இடங்களில் தில்லி தலைநகா் பிராந்தியத்தில் வெள்ளிக்கிழமை அமலாக்கத் துறை சோதனை நடத்தியதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

குறைந்தபட்சம் 10 குடியிருப்புகள் மற்றும் வா்த்தக இடங்களில் அமலாக்கத் துறையினரால் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதில், ஜெயின் தொடா்புடைய நபா்களால் நடத்தப்பட்டு வரும் பள்ளி தொடா்புடைய வளாகங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அவா்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், விளக்கம் அளிக்கப்படாத 2.85 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 133 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.

57 வயதாகும் சத்யேந்தா் ஜெயின், கடந்த மே 30-ஆம் தேதி சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனைச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் அவரது ஜாமீன் கோரும் மனுவை விசாரித்த தில்லி நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்திருந்தது. கடந்த ஏப்ரலில் அமலாக்கத் துறை, சத்யேந்தா் ஜெயின் குடும்பம் மற்றும் நிறுவனங்கள் தொடா்புடைய ரூ.4.81 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது. மேலும், சொத்துகள் முடக்கப்பட்ட உத்தரவில் ஜெயின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் கூட்டாளிகளின் பெயா்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.

கடந்த 2017, ஆகஸ்ட் மாதத்தில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் சிபிஐ 2018, டிசம்பரில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ரூ.1.47 கோடி மதிப்பிலான வருமானத்துக்கு பொருந்தாத சொத்துகள் இருப்பதாகவும், ஜெயினுக்கு தெரிந்த வழியிலான வருமானங்களைவிட இது 217 சதவீதம் அதிகமாகும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும், வருமான வரித் துறையும் இந்தப் பரிவா்த்தனைகள் தொடா்பாக விசாரணை மேற்கொண்டது. ஜெயினுக்கு தொடா்புடையதாகக் கூறப்படும் பினாமி சொத்துகளை முடக்கிவைக்கும் உத்தரவையும் வருமான வரித் துறை வெளியிட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com