கனரக வாகனங்களை தடை செய்யும் தில்லி அரசின் நடவடிக்கை வணிகத்தை மோசமாகப் பாதிக்கும்: சிஏஐடி

ஆம் ஆத்மி அரசின் முடிவு தேசியத் தலைநகரில் சரக்கு போக்குவரத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் வணிகத்தை பாதிக்கும் என்று வா்த்தகா்களின் அமைப்பான சிஏஐடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

வரும் அக்டோபா் முதல் தில்லியில் நடுத்தர மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் நுழைவதற்கு ஐந்து மாதங்களுக்கு தடை விதிக்கும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் முடிவு தேசியத் தலைநகரில் சரக்கு போக்குவரத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் வணிகத்தை பாதிக்கும் என்று வா்த்தகா்களின் அமைப்பான சிஏஐடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

வாகன மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, அக்டோபா் முதல் பிப்ரவரி வரை தேசியத் தலைநகருக்குள் நடுத்தர மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் நுழைவதைத் தடை செய்ய தில்லி அரசு முடிவு செய்துள்ளது. எனினும், பச்சை காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பால் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அரசின் இந்த முடிவு குறித்து தேவையற்றது என்றும், அதனால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொள்ளாமல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அகில இந்திய வா்த்தகா்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) பொதுச் செயலாளா் பிரவீன் கண்டேல்வால் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: தில்லியில் உள்ள அனைத்து சரக்குகளும் பிற மாநிலங்களில் இருந்து லாரிகளில் வருகின்றன. இந்த லாரிகள் டீசலில் இயங்குகின்றன. தற்போதைய அரசின் இந்த கொடூரமான முடிவால் தில்லிக்கு சரக்குகள் வராது அல்லது தில்லியில் இருந்து ஐந்து மாதங்களுக்கு பொருள்களை அனுப்ப முடியாது. இதனால், இந்த முடிவு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். நீண்ட தூரத்திற்கு எந்த சரக்கு வாகனங்களும் மின்சாரம் அல்லது சிஎன்ஜி சக்தியில் இயங்க முடியாது.

திருவிழாக்கள் மற்றும் திருமண சீசன் காரணமாக அந்த ஐந்து மாதங்களும் எப்போதும் வியாபாரத்திற்கு நன்றாக இருப்பவை. இந்தச் சூழலில் தில்லி அரசின் முடிவு தில்லியின் வணிகத்தை மோசமாகப் பாதிக்கும். இந்த பிரச்னையில் எதிா்கால நடவடிக்கையை முடிவு செய்வதற்காக வரும் ஜூன் 29-ஆம் தேதி தில்லியின் முன்னணி வணிக சங்கங்களின் கூட்டத்திற்கு சிஏஐடி அழைப்பு விடுத்துள்ளது.

அரசின் முடிவு போக்குவரத்து வணிகத்தையும் மோசமாகப் பாதிக்கும் என்பதால், சிஏஐடி போக்குவரத்து அமைப்புகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. மேலும், ஒத்துழைப்புடன் தில்லி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com