இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு: மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டும் என மதிமுக தலைவர் வைகோ மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தார்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டும் என மதிமுக தலைவர் வைகோ மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தார்.
 மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் மதிமுக தலைவர் வைகோ பேசியதாவது:
 கடந்த 40 ஆண்டுகளாக, இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களைத் தாக்கி வருகிறது. இதில் 800 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடுமையான தாக்குதலில் ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு கை, கால்கள் முறிந்துள்ளன. மீன்பிடிப் படகுகள் உடைக்கப்பட்டு வலைகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு, எந்தவிதமான இழப்பீடும் வழங்கப்படவில்லை. இப்போது இலங்கை கடற்படையால் பறிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளை ஏலம் விடுகின்றனர்.
 கடந்த பிப்ரவரி மாதம் 44 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்து 5 படகுகளைப் பறிமுதல் செய்தனர்.
 பாக். நீரிணையில் இதுபோன்று பலமுறை, இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுடுவதும், படகுகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக நிகழ்கிறது.
 சில ஆண்டுகளுக்கு முன்பு, கேரளக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த இரண்டு மீனவர்களை இத்தாலியக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டனர்.
 இத்தாலிய வீரர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இறுதியில் இறந்த இரண்டு மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு கோடி ரூபாய், படகுக்கு 2 கோடி ரூபாய் என பத்துக் கோடி ரூபாய் இழப்பீடு தரப்பட்டு இத்தாலிய கடற்படையினர் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
 அதே சமயத்தில், 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி, இலங்கை அணியைத் தோற்கடித்து கோப்பையை வென்றதால் ஆத்திரம் அடைந்த இலங்கைக் கடற்படையினர், வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை அருகே ஹெலிகாப்டரில் வந்து, மீன்பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் மீது குண்டுகளை வீசியதில், ஆறு மீனவர்களின் உடல்கள் சிதறி சின்னாபின்னமாகிப் போனது.
 இலங்கைக் கடற்படை இதுவரை 800 தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றுள்ளது. இதில் இலங்கை கடற்படையினர் மீது வழக்கு தொடரப்படவில்லை. மீனவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவில்லை. இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com