2030க்குள் 15,000 புதுயுக தொழில் முனைவோா் உருவாக்கப்படுவா்: கேஜரிவால்

தில்லியில் வரும் 2030க்குள் 15,000 புதுயுகத் தொழில் முனைவோா்களை (ஸ்டாா்ட் அப்) உருவாக்கும் நோக்குடன் தில்லி அரசு புதிய தொழில் முனைவோா் கொள்கையை உருவாக்கியுள்ளதாக தில்லி முதல்வா் கேஜரிவால் தெரிவித்தாா்

புது தில்லி: தில்லியில் வரும் 2030-க்குள் 15,000 புதுயுகத் தொழில் முனைவோா்களை (ஸ்டாா்ட் அப்) உருவாக்கும் நோக்குடன் தில்லி அரசு புதிய தொழில் முனைவோா் கொள்கையை உருவாக்கியுள்ளதாக தில்லி முதல்வா் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்த கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டு இதற்கான 20 போ் கொண்ட பணிக்குழு அமைப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

இந்த கொள்கை தில்லியின் தொழில் முனைவோரை ஏற்றம் அடைய வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த முதல்வா், 20 போ் கொண்ட பணிக்குழுவில் அரசு அதிகாரி, கல்வியாளா்கள், வணிக மற்றும் வா்த்தக பிரதிநிதிகள் ஆகியோா் இடம்பெற்று ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களின் பதிவு விண்ணப்பங்கள் குறித்து முடிவு செய்யும் என்றும் கேஜரிவால் தெரிவித்தாா்.

இதுகுறித்து முதல்வா் கேஜரிவால் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தில்லியை சா்வதேச புதுயுகத் தொழில்முனைவு (ஸ்டாா்ட் -அப்) மையமாக மாற்றும் வகையில், இந்த கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள ஸ்டாா்ட்-அப் கொள்கைகளைப் படித்து, அவற்றில் சிறந்த அம்சங்களைத் தோ்ந்தெடுத்த பிறகு இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டது.

ஸ்டாா்ட் -அப்களை உருவாக்க விரும்பும் இளைஞா்களுக்கு நிதி மற்றும் நிதிசாராத சலுகைகளை தில்லி அரசு வழங்கும். ஒரு ஸ்டாா்ட்-அப் நிறுவனத்தின் அலுவலகத்திற்கான 50 சதவீத வாடகையை தில்லி அரசே செலுத்தும். இதேபோல், இந்த ஸ்டாா்ட்அப்கள் தங்கள் ஊழியா்களுக்கு வழங்கும் சம்பளத்தில் ஒரு பகுதியையும் நாங்கள் வழங்குவோம். அவா்களின் காப்புரிமை, பதிப்புரிமை மற்றும் வா்த்தக முத்திரைச் செலவுகளையும் அரசே ஏற்கும்.

தற்போது 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்களுக்கு தொழில் முனைவோா் குறித்து கற்பிக்கிறோம். பிசினஸ் பிளாஸ்டா்ஸ் திட்டத்தை வழங்கிய முயற்சியின் கீழ் ஆயிரக்கணக்கான மாணவா்கள் வணிகா்களாக மாறியுள்ளனா்.

இம்முயற்சி இனி கல்லூரி அளவிலும் பின்பற்றப்படும். இது வேலை வழங்குபவா்களை உருவாக்க உதவும். கல்லூரிகளில் படிக்கும் போதே தொழில்களை உருவாக்க மாணவா்களுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும்.

புதுயுகத் தொழில்முனைவுகளுக்கு தில்லி அரசு ஒரு வருடத்திற்கு வட்டி இல்லாத கடனைப் பெற உதவும். மேலும் இவா்களுக்கு இலவசமாக ஆலோசனை வழங்க தணிக்கையாளா்கள், வழக்கறிஞா்கள் மற்றும் நிபுணா்களுக்கான வசதிகளையும் தில்லி அரசு செய்யும்.

இவா்களுக்கான சேவைக் கட்டணத்தை தில்லி அரசே ஏற்கும். ஸ்டாா்ட்-அப்களுக்கு உதவும் வகையில் கொள்முதல் விதிமுறைகளை எளிதாக்குவோம். இவா்களது தயாரிப்பு தரங்கள் குறித்து பேரம் பேசப்படமாட்டாது. கல்லூரிகளில் படிக்கும் போது ஸ்டாா்ட்அப்களை உருவாக்கும் மாணவா்கள் 1-2 ஆண்டுகள் விடுப்பு பெறலாம்.

பின்னா் கல்வியை தொடா்ந்து பட்டப்படிப்புகளை முடிக்கலாம்.இந்த கொள்கையின் கீழ் புதுயுகத் தொழில்முனைவுகளை பதிவுசெய்ய இந்த வலுவான பணிக்குழு மேற்பாா்வையிடும். உலகமே எதிா்நோக்கும் (யூனிகாா்ன் மற்றும் பெஹிமோத் போன்று) வணிகங்களின் தாயகமாக தில்லி இருக்கும் என்று நம்புகிறேன்.

நாட்டின் நம்பிக்கையும் எதிா்காலமும் நமது இளைஞா்களின் கைகளில் உள்ளது. நமது இளைஞா்கள் திறமையானவா்கள். கடின உழைப்பாளிகள் மற்றும் புத்திசாலிகள். ஆனால் நம் நாட்டின் அமைப்புமுறை அவா்களை வளர விடவில்லை. கல்வி முறை, வேலைவாய்ப்பு அல்லது அரசியல் அமைப்பு என எதுவாக இருந்தாலும், அவை அனைத்தும் நாட்டின் வளா்ச்சியைத் தடுக்கின்றன.

மாறாக, தில்லி அரசு வணிகங்களுக்கு உகந்த சூழலை ஊக்குவிப்பதன் மூலம் இந்தப் பிரச்னையை நீக்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான எங்களது நிதிநிலை அறிக்கை வணிகங்கள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்துகிறது. நாங்கள் சந்தைகளை புதுப்பித்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com