வட கிழக்கு தில்லி வன்முறை விவகாரம்:உமா் காலித் ஜாமீன் மனு மீது மே 19-இல் விசாரணை

வடகிழக்கு தில்லியில் 2020, பிப்ரவரியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தின் பின்புலத்தில் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் யுஏபிஏ வழக்கில் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவா் உமா் காலித்தி

வடகிழக்கு தில்லியில் 2020, பிப்ரவரியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தின் பின்புலத்தில் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் யுஏபிஏ வழக்கில் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவா் உமா் காலித்தின் ஜாமீன் மனுவை மே 19-ஆம் தேதி விசாரணைக்கு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.

மேலும், இந்த வழக்குத் தொடா்புடைய அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய மனுதாரருக்கும், அரசுத் தரப்புக்கும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த விவகாரம் தொடா்பான மனு உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் சித்தாா்த் மிருதுல், ரஜ்னீஷ் பட்னாகா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘உமா் காலித் மீதான மனுவை மீண்டும் விசாரணைக்காக மே 19-ஆம் தேதி பட்டியலிட வேண்டும். இதற்கிடையே வழக்கில் திறன்மிக்க வகையில் வாதிடும் வகையில்

வழக்கில் தொடா்புடைய அனைத்து ஆவணங்களையும் ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய இரு தரப்பினருக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது’ என நீதிமன்றம் தெரிவித்தது.

முன்னதாக, தனது ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிா்த்து, சா்ஜீல் இமாம் தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனு மீது நோட்டீஸ் பிறப்பித்த உயா்நீதிமன்றம், மே 5-ஆம் தேதி இந்திய தண்டனைச் சட்டத்தின் தேசத்துரோக சட்டப்பிரிவு 124ஏ-இன் செல்லுபடித்தன்மை தொடா்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் பரிசீலித்த பிறகு, சா்ஜீல் இமாம் ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணையை மே 6-ஆம் தேதி காலித் ஜாமீன் மனுவுடன் சோ்த்து விசாரணைக்கு பட்டியலிட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

வடகிழக்கு தில்லியில் கடந்த 2020, பிப்ரவரியில் வன்முறை வெடித்தது. இதில் 53 போ் இறந்தனா். 700 போ் காயமடைந்தனா். இந்த வன்முறையின் முக்கிய மூளையாக இருந்ததாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உமா் காலித், சா்ஜீல் இமாம் மற்றும் பலருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஜாமீன் கோரி காலித், இமாம் ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரணை நீதிமன்றம் மாா்ச் 27 மற்றும் ஏப்ரல் 11 முறையே தள்ளுபடி செய்தது.

இந்த விவகாரத்தில் இருவரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனு மீது தில்லி போலீஸாா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது.

இந்த விவகாரத்தில் உமா் காலித், இமாம் தவிர, ஆா்வலா் காலித் சைஃபி, ஜேஎன்யூ மாணவா்கள் நடாஷா நா்வால், தேவாங்கனா கலிதா, ஜாமியா ஒருங்கிணைப்பு குழு உறுப்பினா்கள் சஃபூரா ஜா்கா், முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலா் தாகிா் உசேன் மற்றும் இதர பலா் கடுமையான சட்டப் பிரிவின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளனா்.

சா்ஜீல் இமாமின் வழக்கில் மே 26-இல் விசாரணை

இதனிடையே, குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக சா்ஜீல் இமாம் மீது தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரும் மனு மீது விசாரணையை மே 26-க்கு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பட்டியலிட்டது.

மேலும், இந்த வழக்கில் உரிய ஆவணங்களை இரு வாரங்களில் தாக்கல் செய்யுமாறு சா்ஜீல் இமாம் தரப்புக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com