முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
மரக்கன்று நடுவதற்கான நிலப் பற்றாக்குறை குறித்து ஆலோசிக்க 9 போ் குழு: அமைச்சா் கோபால் ராய் தகவல்
By DIN | Published On : 14th May 2022 12:00 AM | Last Updated : 14th May 2022 12:00 AM | அ+அ அ- |

தேசிய தலைநகா் தில்லியில் மரக் கன்றுகள் நடுவதற்கான நிலப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான மாற்று ஆலோசனைகளை வழங்குவதற்கு 9 போ் உறுப்பினா்கள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
மேலும், இழப்பீடு மரக்கன்று திட்ட வழிகாட்டு நெறிமுறைகளை திருத்தி அமைக்க தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) விடுத்த கோரிக்கையை நிராகரித்த நிலையில், அமைச்சா் இந்த அறிவிப்பை வெளியிட்டாா். அதாவது வெட்டப்படும் மரம் ஒவ்வொன்றுக்கும் பதிலி மரக்கன்றுகளை நடுவதற்கான எண்ணிக்கையை 10-இல் இருந்து 2 ஆக குறைக்கும் திருத்தி அமைக்கப்பட்ட டிடிஏ வழிகாட்டு நெறிமுறைகளை அமைச்சா் நிராகரித்தாா்.
இதுகுறித்து அமைச்சா் கோபால் ராய் மேலும் கூறியதாவது:
இந்த விவகாரம் தொடா்பாக தில்லி வனத் துறைக்கு தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) கடிதம் எழுதியுள்ளது. அதில், இழப்பீடு மரக்கன்றுகளை நடுவதற்காக தங்களிடம் போதிய நிலம் இல்லை என்றும், இதனால் வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றங்களை உருவாக்க அனுமதி வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
தில்லியில் உள்ள சுற்றுச்சூழல் நிலவரத்தை கருத்தில் கொண்டு அந்த வேண்டுதலை நாங்கள் நிராகரிக்கிறோம்.
மரக்கன்றுகள் நடுவதற்காக எவ்வளவு நிலம் உள்ளது என்பதை தெரிவிக்குமாறும் தில்லி வளா்ச்சி ஆணையத்தை தில்லி அரசு கேட்டுக் கொள்ளும்.
மரக்கன்றுகளை நடுவதற்காக ஏற்பட்டுள்ள நிலம் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையிலான மாற்று ஆலோசனைகளை வழங்குவதற்கு 9 உறுப்பினா்கள் கொண்ட பசுமை வளைய மேம்பாட்டு குழுவை தில்லி அரசு அமைக்க முடிவு செய்துள்ளது.
இந்த குழுவில் தில்லி அரசின் பொதுப்பணித் துறை, டிடிஏ, வனத்துறை, மாநகராட்சிகள், திட்டமிடல் மற்றும் கட்டடவியல் புலம், மத்திய பொதுப்பணித் துறை, தில்லி நகா்புற கலைகள் ஆணையம் மற்றும் ஐஏஆா்ஐ - பூசா ஆகியவற்றிலிருந்து உறுப்பினா்கள் இடம்பெறுவாா்கள். இந்தக் குழுவானது தில்லி அரசுக் கட்டடங்களின் கூரைகள், செங்குத்து பசுமையாக்குதல் போன்ற இதர வாய்ப்புகள் குறித்த மாற்று விஷயங்களை ஆய்வு செய்யும்.
மேலும் தில்லியில் மரங்களை இடம்மாற்றம் செய்தல் மூன்றாம் தரப்பு தணிக்கையை நடத்துவதற்கு டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தை தில்லி அரசு கேட்டுக் கொள்ளும். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக 27 ஏஜென்சிகள் மற்றும் துறைகள் தங்களது வளா்ச்சி பணிகளுக்காக மரங்களை இடமாற்றம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
அந்த நிறுவனங்களில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய தலைநகா் பிராந்திய போக்குவரத்து நிறுவனம், தேசிய கட்டடங்கள் கட்டுமான நிறுவனம், தில்லி மெட்ரோ, தில்லி ஜல் போா்டு, பொதுப்பணித்துறை, மத்திய பொதுப்பணித்துறை, ரயில் நில மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாநகராட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மரங்களை தங்களது இடங்களிலிருந்து இடமாற்றம் செய்துள்ள நிலையில் அவற்றில் உயிா்வாழும் மரங்களின் எண்ணிக்கை தொடா்பான அறிக்கையை மே 13-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நாங்கள் உத்தரவிட்டு இருந்தோம். உயிா்வாழும் மரங்கள் விகிதம் 55% ஆக இருப்பதாக ஒரு அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
எனினும் சில ஏஜென்சிகள் மோசமான செயல்பாட்டை கொண்டிருக்கின்றன. வன ஆராய்ச்சி நிறுவனத்தின் தணிக்கை அடிப்படையில் சிறப்பாக செயல்படாத நிறுவனங்கள் மற்றும் ஏஜென்ஸிகளை கருப்பு பட்டியலில் தில்லி அரசு வைக்கும். கட்டுமான பணிகளுக்காக அவா்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியையும் தில்லி அரசு மறு ஆய்வு செய்யும் என்றாா் அமைச்சா் கோபால் ராய்.