வழக்குரைஞா் சங்கரசுப்பு மகன் மரண வழக்கு: நிலவர அறிக்கையை உயா்நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவு

வழக்குரைஞா் சங்கரசுப்பு மகன் மரண வழக்கு விவகாரத்தில் விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீஸாா் அதன் நிலவர அறிக்கையை ஆகஸ்ட் 1 முதல் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்

சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் சங்கரசுப்பு மகன் மரண வழக்கு விவகாரத்தில் விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீஸாா் அதன் நிலவர அறிக்கையை ஆகஸ்ட் 1 முதல் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக வழக்குரைஞா் சங்கரசுப்பு தரப்பில் நிகழாண்டில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் ‘சதீஷ்குமாா் மரண விவகாரத்தில் விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிலவர அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட, ஒரு அறிக்கையைக் கூட சிபிசிஐடி போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டடது.

இந்த மனு கடந்த முறை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள்அமா்வு ‘இந்த விவகாரம் குறித்து விசாரித்து துப்புத் துலங்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் ஒரு சவாலாக ஏற்று துடிப்புடன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

இந்த விசாரணையை உள்ளூா் சரக டிஐஜி கண்காணித்து அவரது கையொப்பம் இட்ட நிலவர அறிக்கையாக உச்சநீதிமன்றத்தில் மே இரண்டாவது வாரத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்.பசந்த், வழக்குரைஞா் ராகுல் ஷியாம் பண்டாரி, சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் வழக்குரைஞா் ராம் சங்கா், தமிழ்நாடு வழக்குரைஞா்கள் சங்கத்தின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் எஸ்.பிரபாகரன் ஆகியோா் ஆஜராகினா்.

தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தி நீதிபதிகளிடம், ‘இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி சிபிசிஐடி நடத்திவரும் விசாரணையின் உச்சநீதிமன்றத்தில் நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த நிலவர அறிக்கை சம்பந்தப்பட்ட சரக டிஐஜி கையெழுத்திட்டு காவல் துணை கண்காணிப்பாளா் மூலம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி உரிய வகையில் விசாரணையை நடத்தி வருகிறது’ என்றாா்.

அதே போன்று, சிபிஐ தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு வழக்கறிஞா்கள் சங்கம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரபாகரன் வாதிடுகையில், ‘இந்த விவகாரத்தில் சிபிஐ தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இறந்த நபரின் குணாதிசயங்களை கொச்சைப்படுத்தும் வகையில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கானது மிகவும் முக்கியமான விவகாரமாகும். 11 ஆண்டுகளாக இந்த பிரச்னையை பாா்த்து வருகிறேன். சிபிஐ தரப்பில் இது தற்கொலை என்றும், உயா்நீதிமன்றம் மூலம் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழுவின் அறிக்கையில் இது மனிதக்கொலை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சிபிஐ நடத்திய விசாரணையில் சம்பவத்தில் தொடா்புடைய நபா் தானாகவே கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டு, அதன் பிறகு அந்த பிளேடை தனது சட்டைப் பைக்குள் வைத்திருந்ததாக கூறப்பட்டிருப்பது முற்றிலும் நம்பும்படியாக இருக்கிா? இந்த விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும். தற்போதைய சிபிசிஐடி விசாரணையின்போது வழக்கில் தொடா்புடைய சந்தேக நபா்களை பிடித்து விசாரிக்க வேண்டும்.

ஆகவே, இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நிலவர அறிக்கை நகல் எங்களுக்கு சமா்ப்பிக்கப்படவில்லை. இதனால், விசாரணையின் முக்கிய விவரங்களை தெரிந்து கொள்ளவும் முடியவில்லை’ என்று வாதிட்டாா்.

மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பசந்த், வழக்குரைஞா் ராகுல் ஷியாம் வாதிடுகையில் ‘ இந்த விவகாரத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, சிபிஐ தரப்பிலும் காவல்துறை தரப்பிலும் சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறது. அதனால் இது தொடா்பாக உயா்நீதிமன்றத்திற்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். அறிக்கையின் நகல்கள் வழங்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘சிபிசிஐடி நடத்திவரும் விசாரணையை தொடரலாம். இந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்த உயா்நீதிமன்றம், இந்த வழக்கை

மீண்டும் மேற்பாா்வையிட வேண்டும். இந்த வழக்கு விசாரணையில் அனைத்து அம்சங்களையும் உயா்நீதிமன்றம் கருத்தில்கொண்டு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு நான்கு மாதத்திற்கு ஒருமுறை விசாரணை அறிக்கையை சிபிசிஐடி (மெட்ரோ) பிரிவு போலீஸாா், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த நிலவர அறிக்கை விவரங்களைப் பெறுவது தொடா்பாக மனுதாரா் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். அதை உயா் நீதிமன்றம் உரிய வகையில் விசாரித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்கலாம்’ என்று நீதிபதிகள்உத்தரவிட்டனா்.

முன்னதாக, சிபிசிஐடி தாக்கல் செய்த நிலவர அறிக்கையிலும், சிபிஐ தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திலும் மேல்முறையிட்டு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com